இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என எச்சரிக்கை

இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமாக பரவிக்கொண்டுள்ள நிலையில் அரசாங்கம் நாட்டினை திறக்கும் நடவடிக்கைகள் ஆரோக்கியமானதல்லவெனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் நிலைமைகள் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் சகல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் உள்ளது. இப்போது நாட்டில் அதிகளவான வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர் என்றால் நாட்டில் வைரஸ் பரவல் அதிகம் என்பதே அதன் அர்த்தமாகும்.

இது சமூக தொற்றா அல்லது கொத்தணிகளா என்பது விவாதமல்ல. வைரஸ் தொற்று வேகமாக பரவிக்கொண்டுள்ளது. இதற்கு காரணம் என்னவெனில் அவசியமான நேரத்தில் நாட்டை முடக்காது சகல பகுதிகளும் திறக்கப்பட்டமையே சகல நெருக்கடிக்கும் காரணமாகும்.

பிரித்தானியாவில் காணப்படும் மாறுபட்ட வைரஸ் பரவல் ஆசியா உள்ளிட்ட 20 நாடுகளில் தற்போது பரவியுள்ளது. அவ்வாறு இருக்கையில் இலங்கையிலும் இப்போது பரவும் வைரஸ் வழமையாக இதுவரை காலமாக இலங்கையில் காணப்பட்ட வைரஸ் அல்லாது பிரித்தானியாவில் காணப்படும் வைரஸுக்கு ஒத்த ஒன்றாகவே காணப்படுகின்றது.

எனவே அரசாங்கம் இப்போது எடுக்கும் தீர்மானங்களில் எமக்கு உடன்பாடுகள் இல்லை. இப்போது நாம் தவறிழைப்பது மீண்டும் நாட்டினை முழுமையாக முடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்” எனவும் அவர் கூறினார்.

Related Posts