இலங்கையில் தமிழ் மக்கள் அடுத்த 15 வருடங்களில் 2ம் நிலை சிறுபான்மை இனமாக மாற்றப்படும்

இலங்கையில் தமிழ் மக்கள் அடுத்த 15 வருடங்களில் 2ம் நிலை சிறுபான்மை இனமாக மாற்றப்படும் அபாயம் உள்ளதாக சமுதாய மருத்துவ நிபுணரும் தற்போதைய யாழ்.மருத்துவர் சங்கத்தின் தலைவருமாகிய முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.

Murali_vallipura-nathan

2012ம் ஆண்டு 11.2 வீதமாக இருந்த தமிழர்கள் 2031ம் ஆண்டில் 10.3 வீதமாக மாறும் அபாயத்தை ஆய்வுகள் குறிப்பிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜுலை 11ம் திகதி உலக குடித்தொகை தினத்தை ஒட்டி இலங்கையில் தமிழர்களின் எதிர் கால இருப்பு தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், இந்த வருட குடித்தொகை தின தொனிப் பொருளாக அபாய நிலையில் உள்ள ஊறு படத் தக்க குடித்தொகையை பாதுகாப்போம் என ஐக்கிய நாடுகளின் குடித்தொகைப் பிரிவு பிரேரித்து இருக்கிறது . இவ்வாறான ஒரு அபாய நிலையில் வாழும் குடித்தொகையாகத்தான் யுத்தப் பாதிப்பு , மீள்குடியேற்ற மறுப்பு, குற்றங்களுக்கான நீதி மற்றும் இழப்பீடு வழங்கப்படாமை, திட்டமிட்ட பாரபட்சங்கள் போன்றவற்றினால் தொடர்ந்து பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இனமாக இலங்கையில் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ்ப் பெண்கள் ஆண் துணை மற்றும் வாழ்வாதாரம் அற்றும் அதிக இராணுவப் பிரசன்னத்தின் மத்தியிலும் இருப்பதனால் அதிக அபாயத்தில் இருக்கிறார்கள்.

போருக்கு பின்னர் ஏற்படும் அதிகரித்த குழந்தைப் பிறப்புகள் (baby boom ) வடகிழக்கு மாகாணங்களில் போருக்கு பின்னர் ஏற்படவில்லை. இதற்கு திருமண வயதில் இருக்கும் பல பெண்களுக்கு பொருத்தமான ஆண் துணை அற்று இருப்பதே காரணமாகும்.

வடகிழக்கு மாகாணங்களில் 89 ஆயிரம் விதவைகள் உள்ளனர். இதற்குமேல் வடகிழக்கு மாகாணங்களில் ஆண்களின் தொகையை விட பெண்களின் தொகை மிக அதிகம். இதற்கு ஆண்களில் அதிகமாக போரில் ஏற்பட்ட இறப்புகள் , காணாமல்போகச் செயப்பட்டோர் , வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்தோர் போன்றவை காரணங்களாகும்.

இந்நிலையில் அதிகமாக காணப்படும் பெண்களுக்கு பொருத்தமான ஆண்துணையை ஏற்படுத்தும் எவ்விதமான செயற்பாட்டு திட்டங்களோ விதவைகள் மறுவாழ்வுத் திட்டங்களோ எம்மிடம் இல்லை. இதேபோன்று ஏனைய இனங்களுக்கு சமமாக சனத்தொகையை அதிகரிப்பதற்கான திட்டங்களும் எங்களிடம் இல்லை. இதன் விளைவாக குறைந்து வரும் குடித்தொகையின் ஒரு பிரதிபலிப்பாக தான் குறைந்து வரும் யாழ் மாவட்ட பாராளுமன்றப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையையும் பார்க்கவேண்டும்.

ஆகவே தமது அரசியல் வலுவை அதிகரிப்பதற்கும் தமக்கு அடக்குமுறைகளைத் தடுப்பதற்கும் சனத்தொகை அதிகரிப்பை செய்யவேண்டிய கட்டாயத்தில் இன்றைய நிலையில் தமிழர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் சனத்தொகை அதிகரிப்பிற்கு முதலில் நாங்கள் செய்யக்கூடிய விடயம் என்னவென்றால் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள காலம் தாழ்த்திய திருமணங்களை நிறுத்தவேண்டும்.

2012 இல் மேட்கோள்ளப்பட்ட ஆய்வுகளின் படி இலங்கையில் காலம் தாழ்த்திய திருமணங்களில் தமிழர்களே முதலிடத்தில் உள்ளார்கள். அதிலும் யாழ்ப்பாண மாவட்டம் இலங்கையிலேயே முதலாவது இடத்தில் இருக்கின்றது.

குறிப்பாக இலங்கைத் தமிழ் இனத்தில் ஆண்களின் சராசரி திருமண வயது 27.4 வருடங்களாகவும் , தமிழ் பெண்களின் சராசரி திருமண வயது 24.4 வருடங்களாகவும் இலங்கையில் உள்ள ஏனைய இனங்களின் சராசரி திருமண வயதுகளை விட இது அதிகமாகவும் இருக்கின்றது.

அதாவது ஏனைய இனத்தவர்கள் உரிய வயதில் திருமணம் செய்கிறார்கள். தமிழர்களில் உரிய வயதில் திருமணம் செய்ய முடியாமைக்கு, பல காரணங்கள் இருக்கின்றன.

குறிப்பாக பொருளாதாரம், சீதனம், சாதி மதப் பிரச்சினை, பிர தேசவாதம், மிகையான சோதிட நம்பிக்கை உள்ளிட்ட பல சிக்கல்கள் எங்கள் சமூகத்தில் இருக்கின்றன.

முக்கியமாக போரின் பின்னர் இந்தப் பிரச்சினைகள் மேலும் அதிகரித்திருக்கின்றன . எனவே இவைகள் முதலில் களையப்படவேண்டும். கால தாமதமான திருமணங்கள் கர்ப்பம் தரிக்கும் தன்மையைக் குறைத்து சனத்தொகை வளர்ச்சியை மட்டுமல்லாமல், பிறக்கும் அடுத்த சந்ததியையும் பல்வேறு வகையிலும் பாதிக்கின்றது.

அதிகரித்த வயதில் கர்ப்பம் தரிக்கும் போது கர்ப்ப காலத்தில் தாய்க்கும் சேய்க்கும் அதிகரித்த சிக்கல்கள் ஏற்படும் . நிறை குறைந்த பிள்ளைகள் பிறப்பது, குறை மாதப் பிரசவம், பிறப்புக் குறைபாடுகள், புத்திக் கூர்மைக் குறைவு போன்ற பிரச்சினைகள் குழந்தைகளில் மாத்திரமல்லாது கர்ப்ப காலத்தில் தாய் சேய் உயிர் இழப்புகள் கூட அதிகமாக ஏற்படுகிறது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் அதிக வயது வேறுபாடு காணப்படும் போது அதிகளவு கருத்து வேறுபாடுகள் மற்றும் தொடர்பாடல் பிரச்சினைகள் காணப்படுவதுடன் குடும்பங்களில் அதிகளவு மன உளைச்சலும் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன . எனவே உரிய வயதில் திருமணம் செய்வதும் தாமதம் இன்றி குழந்தைகள் பெற்றுக் கொள்வதும் ஆரோக்கியமான சமூகத்திற்கும், சனத்தொகை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் உகந்ததாகும்.

இதேவேளை யுத்த சூழ்நிலை உருவாக முன்னர் எங்கள் சமுகத்தில் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் நிலை காணப்பட்டது . ஆனால் அது படிப்படியாக குறைவடைந்து 2012ம் ஆண்டு சராசரியாக 2.0ஆக மிகவும் குறைவடைந்துள்ளதுடன் மேலும் குறையப் போகும் யாழ்ப்பாண குடித்தொகைக்கு கட்டியம் கூறுகிறது. இதே வேளை தென் பகுதியில் மேற்கொள்ளப்படும் தீவிர இனவாத பிரசாரங்களினால் 1998 இல் 1.9 ஆக இருந்த இலங்கையின் கருவள வீதம் இப்போது 2.4 ஆக அதிகரித்து இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் 2012ம் ஆண்டில் 11.2வீதமாக இருந்த தமிழர்கள் 2021ம் ஆண்டில் 10.8 வீதமாகவும், 2031 ம் ஆண்டில் 10.3 வீதமாகவும், 2041ம் ஆண்டில் 9.8 வீதமாகவும் வீழ்ச்சியடையும் நிலை வரும். இதன் காரணமாக இலங்கைத் தமிழர்கள் வெகு விரைவில் முதலாவது சிறுபான்மை இனம் என்ற நிலையை இழக்க வேண்டி வரலாம். உலக நாடுகள் இந்தளவுக்காவது தமிழர் பிரச்சினையில் கரிசனம் காட்டியதற்கு தமிழர்களின் முதலாவது சிறுபான்மை இன நிலையே காரணம் என்பதை ஒவ்வொரு தமிழரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தென்னிலங்கையில் திட்டமிட்ட வகையில் சனத்தொகை வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. 2011 இல் இனவாத அரசு பொலிஸ் உட்பட்ட அனைத்து ஆயுதப் படையினருக்கும் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்வதற்கு ஒரு இலட்சம் ரூபாய் ஊக்குவிப்புத் தொகை வழங்கத் தொடங்கியது. இந்த நிலை தற்போதைய அரசாங்கத்திலும் தொடர்வதை தமிழ் தலைவர்கள் அவதானிக்க வேண்டும்.

மாறாக தமிழர் வாழும் பகுதிகளில் கட்டாய கருத்தடைகளும் சனத்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுமே தொடர்கின்றது. உதாரணமாக 2013 இல் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வலைப்பாடு மற்றும் அயல் கிராமங்களில் இடம் பெற்ற கட்டாயக் கருத்தடையைக் குறிப்பிடலாம். இன்று வரை இந்த இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றவாளிகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

இதைவிட தமிழர்களில் பலர் போருக்குப் பின்னர் வாழ்வாதாரம் இன்றி வறுமையில் உழலுகின்றனர் .

ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்திப் பிரிவினால் 2012 இல் மேற்கொள்ளப் பட்ட ஒரு ஆய்வு யாழ்.மாவட்டத்தில் 16 வீதமானவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பதாக காட்டுகிறது. இது இலங்கையின் வறிய மாவட்டங்களாக வழமையாக கருதப்படும் மொனராகலை 14.5% மற்றும் பதுளை 13.3% ஆகியவற்றை விட அதிகமாக இருப்பதை அவதானிக்க வேண்டும். சனத்தொகையை அதிகரிப்பதற்கு பொருளாதாரமும் வலுப்படுத்தப் படவேண்டும்.

2010 இல் இலங்கையில் மந்த போசணையினால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வவுனியா 51 வீதம். யாழ்ப்பாணம் 41வீதம் ஆகவும் இருந்தது. மந்த போசணையும் வறுமையும் அதிகரித்த நோய்களுக்கும் இறப்புகளுக்கும் இட்டுச் சென்று குடித்தொகையை குறைக்கிறது.

தற்போதைய சூழ்நிலையில் இவற்றை எல்லாம் நிவர்த்தி செய்யவேண்டிய கடப்பாடு எமக்குள்ளது. முக்கியமாக தமிழர்கள் வாழ்க்கைத்துணை தேடுவதில் பிற்போக்கான முறைகளைக் களைந்து காலம் தாழ்த்திய திருமணங்களை முழுமையாக நிறுத்த வேண்டும். பொருளாதார ரீதியாக வலுப்பெற வேண்டும். வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் இலங்கையின் சீதன சந்தைக்கு வலுச் சேர்க்காமல் தமிழர்களின் பொருளாதாரத்தை மீளக் கட்டி எழுப்புவதற்கு உதவ வேண்டும். இனப் படுகொலைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியதுடன் நின்றுவிடாமல் விதவைகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கு மாகாண அரசாங்கம் ஒரு திட்டத்தை அமுல் படுத்தி வெளிநாட்டுத் தமிழர்களையும் இதில் இணைத்துக் கொள்ளவேண்டும். தமிழ் தலைவர்கள் தமிழ் தேசியம் என்ற பெயரில் வாக்கு கேட்கும் அதே வேளை தமது தமிழ் வாக்களர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நேர்மையாக உழைக்கவேண்டும் . மனித உரிமை ஆர்வலர்களுடன் இணைந்து தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும். என்றார்.

Related Posts