இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் மீளத் திறக்கப்படும் விமான நிலையங்கள்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுமார் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீளத் திறக்கப்படவுள்ளன.

அதன்படி இன்றைய தினம் சுமார் 15 விமானங்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரிய ஆரச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இலங்கைக்கு வருகைத் தரவிருந்தவர்களே இவ்வாறு வருகை தரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் சுற்றுலாப் பயணிகள் 3 பிரிவுகளின் கீழ் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சுற்றுலாத்துறையைச் சார்ந்தவர்களை மீள நாட்டிற்கு அனுமதிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கான சட்டத்திட்டங்கள் தளர்த்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டுக்கு பிரவேசிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் சுற்றுலா பயணிகள் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று பரவியதையடுத்து, கடந்த வருடம் மார்ச் மாதம் 19ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பைலட் திட்டத்திற்கு அமைவாக குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளை அழைப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கமைய முதற்கட்டமாக அண்மைய சில நாட்களாக கட்டங்கட்டமாக உக்ரைனில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts