இலங்கையில் திருமணங்களின் போது சீதனம் வாங்கும் நடைமுறையை ஒழிக்க வேண்டும் என்று ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, இலங்கையில் சீதன நடைமுறையினால் தமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலேயே பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
சீதனம் என்பது பெண்கள் மீது வைக்கப்படுகின்ற தேவையற்ற முன்நிபந்தனையாக உள்ளது என்று பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர் கமலா வாசுகி தெரிவித்தார்.
தமிழர் பிரதேசங்களில் சில வழக்காறு சட்டங்கள் மூலமாக சீதனம் வாங்குகின்ற நடைமுறை சட்ட அங்கீகாரத்துடன் நடந்துவருவதாகவும் அவர் கூறினார்.
´போர்க் காலத்தில் சீதனப் பேச்சுக்கள் நடக்காமல் திருமணங்கள் நடந்த குடும்பங்களில் கூட, இன்று சீதனத்தைக் காரணம் காட்டி வன்முறைகள் நடக்கின்றன´ என்றார் கமலா வாசுகி.
சீதனம் என்பது திருமணத்தின் போது நிபந்தனையாக வருவதைத் தடைசெய்ய வேண்டும் என்பது பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்களின் நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.
திருமணத்தின் போது பொருளாதாரம் சார்ந்த முன்நிபந்தனைகளை விதிப்பதை சட்டப்படி தடை செய்ய வேண்டும் என்றுகிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் குழுக்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் கமலா வாசுகி தமிழோசையிடம் தெரிவித்தார்.