இலங்கையில் கொரோனாவால் மேலும் 8 உயிரிழப்புகள் பதிவு – ஒரேநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

பொல்கொல்ல, ஹெட்டிபொல, மத்துகம, நுகேகொட, பன்னிப்பிட்டிய, அம்பகஹபலஸ்ஸ, வத்தள மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆகிய பிரதேசங்களிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன், 62, 45, 53, 56, 76, 48 மற்றும் 57 வயதுடைய ஆண்களும் 73 வயதுடைய பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 655ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 111 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 3 ஆயிரத்து 487ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 94 ஆயிரத்து 856 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 7 ஆயிரத்து 984 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related Posts