இலங்கையில் குணமடைந்த கொரோனா தொற்றாளருக்கு மீளவும் தொற்று – இதுவரை 700 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பூரண குணமடைந்ததாக வீட்டுக்கு அனுப்பப்பட்ட நபர் ஒருவர் மீள அந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்ட சம்பவம் ஜா – எல பகுதியில் பதிவாகியுள்ளது.

67 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொரோனாவால் மீளவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜா எல நகர சபையின் பிரதான பொது சுகாதார பரிசோதகர் அனுர அபேரத்ன தெரிவித்தார்.

கடந்த மார்ச் 17 ஆம் திகதி குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியான நிலையில் அவர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு ஒரு மாத காலம் சிகிச்சையளிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 17 ஆம் திகதி அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

அதன் பின்னர் அவர் வீட்டில் மேலும் 14 நாள் சுய தனிமைப்படுததல் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி, ஏற்கனவே தனக்கிருந்த நெஞ்சு வலி தொடர்பில் சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் அங்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போதே அவருக்கு கொரோனா தொற்று மீள உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக அங்கொடை தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறுநீரக பிரச்சினை, நீரிழிவு நோய் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ள குறித்த தொற்றாளருக்கு ஆரம்பத்தில் இத்தாலியில் இருந்து வந்த உறவினர் ஒருவர் ஊடாக தொற்று ஏற்பட்டிருந்தது.

இந் நிலையில் குணமடைந்த ஒருவருக்கு மீள கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட சம்பவம் முதன் முதலாக இலங்கையில் பதிவாகியுள்ள நிலையில் அது குறித்து சுகாதார அதிகாரிகளின் அவதானம் திரும்பியுள்ளது.

இந் நிலையில் நேற்றையதினம் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் பதிவாகாத நிலையில், 10 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியிருந்தனர்.

இது வரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 702 ஆகும். அதில் 296 பேர் வெலிசறை கடற்படையினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாவர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

இதுவரை இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது.

இந் நிலையில் மேலும் 511 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை மற்றும் சிலாபம் – இரணவில் வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 179 ஆகும். அவர்கள் நாடளாவிய ரீதியில் 29 வைத்தியசாலைகளில் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts