நாட்டில் கடந்த 15 நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றால் 45 மரணங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி வரையில் 13 கொரோனா மரணங்களே பதிவாகியிருந்த நிலையில், சடுதியாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றினால் மூன்றாவது முறையாகவும் நேற்று ஒரே நாளில் 5 மரணங்கள் பதிவாகின.
இந்த மரணங்கள் அனைத்தும் கொழும்பு மாநகர எல்லைப் பகுதியில் இடம்பெற்றுள்ளன.
கொழும்பு 13 ஜிந்துபிட்டியைச் சேர்ந்த 54 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
நீண்டகாலமாக காணப்பட்ட புற்றுநோய் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியும் மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் கொழும்பு 15ஐச் சேர்ந்த 39 வயதுடைய ஆணொருவரும் கொரோனாவால் மரணித்தார். அவர் கொரோனா தொற்று உறுதியானவர் என அடையாளம் காணப்பட்டதையடுத்து, ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மரணித்துள்ளார்.
புற்றுநோய் மற்றும் கொரோனா வைரஸால் ஏற்பட்ட நியூமோனியா காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளது.
இதேவேளை கொழும்பு 12ஐச் சேர்ந்த 88 வயதான ஆணொருவரும் மரணித்தார். இருதய கோளாறு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் மரணம் சம்பவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் அவர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம் கொழும்பு – 8 பொறளையை சேர்ந்த 79 வயதான ஆணொருவர் தனது வீட்டிலேயே உயிரிழந்தார். கொரோனா வைரஸ் தொற்றால் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பே மரணத்திற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் கொழும்பு – 13 ஐ சேர்ந்த 88 வயதான ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.
கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பே இந்த மரணத்திற்கு காரணம் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.