இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது

இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது எனவும் எந்தவிதமான நன்மையும் கிடைக்கப்போவது இல்லை எனவும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. எந்தவிதமான நன்மையும் கிடைக்கப்போவது இல்லை. ஒருவேளை ராஜபக்ஷ வெற்றி பெற்றால் இலங்கை அரசின் சட்டத்தை திருத்தி ஜனாதிபதி பதவியில் இருந்து சிறிசேனவை கழற்றி விட்டு அவர் ஜனாதிபதியாக வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதை அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் தமிழர்களின் பண்பாட்டு தலங்கள் அழிக்கப்படும் அபாயமும் உள்ளது.

இலங்கைப் பிரச்சினையை பொறுத்தவரை வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் கொண்டு வந்த தீர்மானம் மட்டுமே ஒரே தீர்வாக இருக்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்கள் நலனுக்காக செயல்பட வில்லை. அவர்கள் முழுவதுமாக சிங்களர் சார்ந்த வி‌ஷயங்களில் கவனம் செலுத்தி அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.

இலங்கை அரசு கலைக்கப்பட்டதை கண்டித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன. ஒரு வேளை வழக்கு தொடரப்பட்டால் இலங்கை அரசு கலைக்கப்பட்டது செல்லாது என்று அறிவிப்பு வரலாம். ஏனென்றால் இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பதற்கு நான்கு ஆண்டு காலம் முடிய வேண்டும் என்று சட்ட விதி உள்ளது. ஆனால் அந்த சட்டத்தை மீறி தான் தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு உள்ளது.

தமிழக மீனவர் நலன் குறித்து மத்திய அரசுக்கு அக்கறை கிடையாது. இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட படகுகள் மற்றும் மீனவர்களை விடுதலை செய்வதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதை கண்டிப்பதற்கும் அந்த சட்டத்தை விளக்குவதற்கும் நானே நேரில் பிரதமரை சந்தித்து, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடித்து வைக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் இருந்து தமிழக மீனவர்கள் மீது மோடிக்கு அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts