நாடு முழுவதும் பரவிவரும் இன்புளுவென்ஸா வைரஸ் நோய் தொற்றினால், இதுவரை அரச வைத்தியசாலைகளில் நான்கு சிறுவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முக்கியமாக தெற்கில் பரவும் குறித்த இன்புளுவென்ஸா நோய் தொடர்பில் மக்களுக்கு முறையான விளக்கமளித்து அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்நோய் ஏனைய பகுதிகளுக்கும் பரவி உயிர்ச் சேதங்கள் ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அத்தோடு தெற்கில் பரவும் வைரஸ் தொடர்பில் சிகிச்சையளிக்கக்கூடிய மருத்துவ நிபுணர்கள் நாடளாவிய ரீதியில் 10 பேர் மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாடு முழுவதும் இது பரவினால் தீவிர சிகிச்சைக்காக பயிற்சி பெற்ற வைத்தியர்களின் பற்றாக்குறை, உபகரணங்கள் போதாமை, சிறுவர்களுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இடவசதியின்மை போன்ற காரணங்களால் நிலைமை மேலும் மோசமடையலாமெனவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.