உழைப்பின் மகிமையை உலகிற்கு எடுத்தியம்பும் தொழிலாளர் தினம், இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.
மே முதலாம் திகதி கொண்டாடப்படும் தொழிலாளர் தினமானது, வெசாக் வாரத்தை முன்னிட்டு இன்றைய தினத்திற்கு பிற்போடப்பட்டது. அந்தவகையில், இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பேரணிகளும், ஊர்வலங்களும் இடம்பெறவுள்ளன.
இற்றைக்கு 132 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் திரண்ட தொழிலாளர்கள் 8 மணிநேர வேலையை பிரகடனப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1886ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி வரலாற்றில் கறைபடிந்த நாள். தொழிலாளர் உரிமையை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி போராடியவர்கள் மீது அதிகார வர்க்கத்தினரும் பொலிஸாரும் இணைந்து தாக்குதல் நடத்தினர்.
இந்த கலவரத்தில் பொலிஸ் அதிகாரிகள் ஆறு பேர் உயிரிழந்ததை காரணம் காட்டி தொழிலாளர்கள் மீது வெறித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தோடு, தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியமைக்காக ஐந்து பேர் தூக்கிலிடப்பட்ட அதேவேளை, பலருக்கு ஆயுள் தண்டனையும், சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
தொழிலாளர் உரிமைக்காக திரண்டெழுந்த சிக்காகோ நகரில் இரத்த வெள்ளம் பாய்ந்தது. அந்த தியாகத்தின் பலனாய், 1889ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி உலக தொழிலாளர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
அந்தவகையில், உழைப்பின் மகிமை, தொழிலாளர் உரிமை என்பவற்றை பறைசாற்றும் 132ஆவது தொழிலாளர் தினம் இலங்கையில் இன்று கொண்டாடப்படுகிறது.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் பிரதான கூட்டத்தை மட்டக்களப்பில் நடத்தவுள்ளது. அத்தோடு, கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
அத்தோடு, மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம் கொழும்பு பீ.ஆர்.சி. கிரிக்கெட் மைதானத்திலும், ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டம் காலி சமனல விளையாட்டரங்கிலும் நடைபெறவுள்ளன.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிலாளர் தினக் கூட்டம் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.