இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகளின் பின்னர், சிறீலங்காவில் தமிழர்கள்மீது மேற்கொள்ளப்பட்டது ஒரு இனப்படுகொலையே என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயான் தெரிவித்துள்ளார்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பிரித்தானியக் கிளையினரால் நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் உரையாற்றும்போது,
நாம் இவ்வாறான சாட்சியங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும்போதுதான் போர்க்குற்றம் என்றால் என்ன என்பதையும் அதற்கு எவ்வாறான விலைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் ஆத்மார்த்தமாக அறியக்கூடியதாகவுள்ளது. இந்த விடயங்கள் குறித்து விசாரணைசெய்ய காத்திரமான சர்வதேச உள்ளீடு அடங்கலான ஒரு விசாரணைபொறிமுறை அமையவில்லையாயின், இலங்கையில் நிலையான சமாதானம் ஒருபோதும் ஏற்படாது. இலங்கைத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலையே. இவ்வாறான கோரச் சம்பவங்கள் இடம்பெற்றிக்கும்போது இதனை வேறு எவ்வாறு அழைப்பது. பொறுப்புக்கூறும் நடைமுறையில் சர்வதேச உள்ளீடு நிச்சயம் உள்வாங்கப்படவேண்டும். இதனைத் தான் ஐ.நா கூறியிருக்கிறது. இதனைத் தான் சிறிலங்கா அரசும் ஏற்றுக்கொண்டிருந்தது’. என தொிவித்தார்.
இந்நிகழ்வில், இறுதிப்போரில் உயிர்தப்பி வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் பலர் தமது சாட்சியங்களைப் பதிவுசெய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.