இலங்கையில் ஆண்டு தோறும் சுமார் 2000 தொழு நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் 1850 புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேல் மாகாணத்திலே ( 43 சத வீதம் ) கூடுதலான தொழு நோயாளர்கள் காணப்படுகின்றனர். அடுத்த படியாக தென் மாகாணத்தில் 15 சத வீதமும் கிழக்கு மாகாணத்தில் 10 சத வீதமானோரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
1980-ம் ஆண்டு சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டம் காரணமாக வருடாந்தம் சராசரி ஓரு லட்சம் பேருக்கு 19 பேர் என காணப்பட்ட தொழு நோயாளர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைவடைந்ததாக கூறுகின்றார் சுகாதார சேவைகள் பதில் இயக்குநரான டாக்டர் ஜயசுந்தர பண்டார.
”கடந்த சில ஆண்டுகளாக இதே நிலை மாற்றம் இன்றி காணப்பட்டாலும், சுகாதார துறையினரால் சமூக ஊடகங்களின் ஓத்துழைப்புடன்முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்கள் காரணமாக இந்த எண்ணிக்கையை ஒரு மட்டத்தில் தொடர்ந்தும் அப்படியே வைத்திருக்க முடிகின்றது ” என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழு நோய் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இடம் பெற்றுள்ள 22 முன்னுரிமை நாடுகளில் இலங்கையும் இடம் பெற்றுள்ளது.
இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் 10 சத வீதமானோர் சிறுவர்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டுகின்றது.
2020-ம் ஆண்டு தொழு நோய் இல்லாத நாடு இலங்கை என்ற வேலைத் திட்டமொன்றும் தற்போது சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மலேரியா இல்லாத நாடு மற்றும் யானைக்கால் நோய் இல்லாத நாடு என உலக சுகாதார தாபனத்தால் பட்டியல் இடப்பட்டுள்ள இலங்கை 2020-இல் தொழு நோய் இல்லாத நாடு என்ற இலக்கை அடையும் என சுகாதார துறை அதிகாரிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.