இலங்கையில் ஆண்கள் மத்தியில் வாய்ப் புற்றுநோய் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்பாக புற்று நோய் பெண்கள் மத்தியில் கூடுதலாக காணப்படுவது போல் வாய்ப்புற்று நோய் ஆண்கள் மத்தியில் கூடுதலாக காணப்படுவதாக அறிக்கை கூறுகிறது.
ஆண்டு தோறும் 2500 வாய்ப்புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் இந் நோயாளர்களில் 78 சத வீதமானோர் ஆண்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
புற்று நோயாளர்களின் மரண எண்ணிக்கையில் கூடுதலான மரணங்கள் வாய்ப் புற்று நோய் மரணங்கள் என சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சி திட்டம் கூறுகின்றது.
நாளொன்றுக்கு மூன்று பேர் என ஆண்டுக்கு 800 முதல் 900 மரணங்கள், வாய்ப்புற்று நோயால் ஏற்படுவதாக மருத்துவமனை தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது என்கின்றார் தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சி திட்டத்தை சேர்ந்த டாக்டர் சிவப்பிரகாசம் அனுஷ்யந்தன்.
புகைத்தல், வெற்றிலை, பாக்கு, புகையிலை உட்கொள்ளல் போன்ற பழக்கமுடையவர்கள் மத்தியில்தான் இந்த வாய்ப்புற்று நோய் அதிகம் காணப்படுகிறது.
அத்துடன் வாய்ச்சுகாதாரம் சரியான முறையில் பேணப்படாமையும் இந் நோய்க்குரிய மற்றமோர் காரணியாக அமைவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்
இலங்கையில் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் நாளொன்றுக்கு 6 -7 வாய்ப் புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள்.
இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய டாக்டர் சிவப்பிரகாசம் அனுஷ்யந்தன் “ஒவ்வொரு ஆண்டும் அடையாளம் காணப்படும் புற்று நோயாளர்களில் 12 – 15 சத வீதம் வாய்ப் புற்று நோயாளர்கள். அது போல் 18 – 20 சத வீதம் மார்பக புற்று நோயாளர்கள்” என்றார். இந் நோயாளர்களில் 70 சத வீதமானோர் கடைசி தருணத்தில்தான் மருத்துவமனைகளை நாடுவதாக தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக் காட்டுகிறது.