Ad Widget

இலங்கையிலும் 108 அம்புலன்ஸ் சேவை ஆரம்பம்

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 108 அம்புலன்ஸ் சேவை இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அம்புலன்ஸ் சேவை இலங்கையில் செயல்படுவதற்கான நிதி உதவியையும் இந்தியா அளிக்க உள்ளது.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அம்புலன்ஸ் சேவையை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு இந்தியாவிடம் உதவியை நாடியிருந்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் இலங்கைக்குப் பயணம் சென்றிருந்தபோது இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதன்படி ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனம் இலங்கையிலும் 108 அம்புலன்ஸ் சேவையை அளிக்க உள்ளது.

இது குறித்து ஜிவிகே இஎம்ஆர்ஐ அதிகாரிகள் கூறியதாவது: அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இலங்கையில் அம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி இந்த சேவையைத் தொடங்குவதற்காக இந்திய அரசு இலங்கைக்கு ரூ. 50.81 கோடி நிதி உதவி அளிக்க உள்ளது.

முதற்கட்டமாக இலங்கையின் வட, தென் பகுதியில் 88 அம்புலன்ஸ் வாகனங்களுடன் இந்தச் சேவை தொடங்கப்பட உள்ளது.

அம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற 600 ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அம்புலன்ஸ் சேவையைத் தொடர்பு கொள்ள இந்தியாவில் பயன்படுத்தப்படும் 108 என்ற எண்தான் இலங்கையிலும் பயன்படுத்தப்பட உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் 2005-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் 108 அம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. இப்போது இந்தியாவில் 15 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் இந்தச் சேவை வழங்கப்படுகிறது.

இந்தியாவில் மொத்தம் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

Related Posts