இலங்கையிலிருந்து கடத்திச்சென்ற தங்கத்துடன் தமிழகத்தில் ஒருவர் கைது

இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான தங்க கட்டிகளை வைத்திருந்தவரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்தே, இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக தங்க கட்டிகள் ராமநாதபுரத்துக்கு கடத்தப்பட்டு, அங்கிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தயாரான நிலையிலேயே, 16.5 கிலோ தங்க கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

தமிழக மத்திய புலனாய்வு பிரிவினர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து இராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் மற்றும் கிழக்கு கடற்கரைசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனைகளை நடத்திய வேளையில், மோட்டார் வண்டியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மேற்படி தங்க கட்டிகளை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை தமிழக கடலோரப் பாதுகாப்பு படையினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts