மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் நடுகுடாவில் அமைக்கப்பட்டுள்ள குறித்த ‘தம்பபவனி’ காற்றாலை மின் நிலையம், நாட்டின் மின் உற்பத்தியில் மற்றொரு வரலாற்று மைல்கல்லாக தேசிய கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் முதல் நடவடிக்கையாக 100 மெகாவோட் மின்சாரத்தை இவ்வாரம் முதல் தேசிய மின்சார கட்டமைப்பில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
சூழலுக்கு மிகவும் நட்புறவான திட்டமான இதன் மொத்த பெறுமதி 135 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
சுமார் ஒரு வருடத்திற்கும் குறைவான காலப்பகுதியில் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ள இந்த மின் ஆலையின் ஊடாக ஒரு அலகு மின்சாரத்தை 8 ரூபாய் என்ற குறைந்த செலவில் உற்பத்தி செய்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.