இலங்கையின் முன்னேற்ற பாதையில் இந்தியா இலங்கையுடன் கைகோர்த்து நிற்கும்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலாக கலை, கலாசாரம், மொழி ரீதியிலான உறவு நீடித்து வருகிறது. தற்போது துரையப்பா விளையாட்டரங்கம் சீரமைக்கப்பட்டுள்ளமையானது, பொருளாதார வளர்ச்சியின் அடையாளம் என்று இந்தியப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

modi

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ்.துரையப்பா விளையாட்டரங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரினால் இன்று (18) சனிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் இணைந்து கொண்டார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் மோடியுடன் இருந்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் மோடி,

கடந்த ஆண்டு நான் யாழ்பாணம் சென்ற போது மக்கள் என்னை அன்புடன் வரவேற்றது இன்று வரை என் மனதில் புத்துணர்வு அளிக்கிறது. யாழ்பாணத்தில் உள்ள துரையப்பா மைதானம் வெறும் செங்கல் மற்றும் மணலால் கட்டப்பட்டது அல்ல.

இது பொருளாதார வளர்ச்சியின் அடையாளம். இது நமது ஒருங்கிணைப்பிற்கு உத்வேகம் அளிக்கக் கூடியது. இலங்கை மக்களுடன் ஒன்றுகூடி விழா கொண்டாடுவதால் இன்றைய தினம் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த தினம்.

ஐநா.வின் யோகா தின தீர்மானத்திற்கு முதலில் ஆதரவு அளித்தது இலங்கை தான். இலங்கையின் முன்னேற்ற பாதையில் இந்தியா, இலங்கையுடன் கைகோர்த்து நிற்கும் என்றார்.

Related Posts