இலங்கையின் மிக நீளமான மேம்பாலம் என கருதப்படும் இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலம் இன்று (திங்கட்கிழமை) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் இந்த பாலம் திறந்து வைவக்கப்பட்டுள்ளது.
இராஜகிரிய பாலத்தின் நிர்மாணப்பணிகள் இவ்வருட இறுதியிலேயே நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பொதுமக்களின் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு அதன் நிர்மாணப்பணிகளை 11 மாதங்களுக்கு முன்னரே நிறைவு செய்ய ஜனாதிபதி, பணிப்புரை வழங்கியிருந்ததற்கு அமைய குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஸ்பெயின் நாட்டு நிறுவனமும் உள்நாட்டு நிறுவனமும் இணைந்து 2016 இல் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இந்த மேம்பாலத்திற்கான மொத்த செலவு 4,700 மில்லியன் ரூபாய்களாகும்.
நான்கு வாகன ஓடுபாதைகளை கொண்டுள்ள இந்த மேம்பாலத்தின் நீளம் 534 மீற்றர்களாக காணப்படுவதுடன் 150 மீற்றர் நீளமுடைய பிரவேச மார்க்கத்தையும் இது கொண்டுள்ளது.
இதனுடன் இணைந்ததாக இதனைச் சூழவுள்ள பல வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் நாராஹேன்பிட்ட நோக்கிப் பயணிப்பதற்கான மாற்றுவழிப் பாதையும், புத்கமுவ நோக்கி பயணிப்பதற்கான மூன்று வாகன ஓடுபாதைகளைக் கொண்ட வீதியும் இதனூடாக அபிவிருத்தி செய்யப்படுகின்றன.
இந்த மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் இராஜகிரிய பிரதேசத்தை சுற்றியுள்ள பாதைகளில் காணப்படும் அதிக வாகன நெருக்கடி இல்லாது போவதனூடாக வாகனங்களின் வேகம் தற்போதைய வேகத்தைப் போல் 8 மடங்காக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.