இலங்கையின் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் யூன் மாதம் 20 ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்பிரல் 25 ஆம் திகதி இடம்பெற இருந்த பொதுத் தேர்தல் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலையை அடுத்து பிற்போடப்பட்டு இருந்தது.
எனினும் பொதுத்தேர்தலை திகதி குறிக்காமல் பிற்போட முடியாது என எழுந்த வாதப்பிரதிவாதங்களை அடுத்து தேர்தல் ஆணைக்குழு பலதரப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து, எதிர்வரும்யூன் 20ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
இதேவேளை பொதுத்தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஒன்று கூடி கலந்துரையாடியதுடன், பல துறையினர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்துகொண்டது. நேற்று முற்பகல் 10.30 அளவில் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், ஆணைக்குழுவின் உறுப்பினர்களான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், பேராசிரியர் நலின் அபேசேகர ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அதன் பின்னர் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களாக செயற்படும் மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னரே மாவட்ட அரசாங்க அதிபர்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சுகாதாரத்துறையின் தலைமை அதிகாரிகள், தபால் மா அதிபர் மற்றும் அரச அச்சகர் உள்ளிட்ட தரப்பினரும் இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினருடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது..