லொத்தர் பரிசு கிடைத்திருப்பதாக கூறி, இலங்கையர்களை ஏமாற்றிய நைஜீரிய பிரஜையொருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கிளின்ச் கிறிஸ்டியன் எனும் மேற்படி நபர், இலங்கை இளைஞர் ஒருவரிடமிருந்து 720,400 ரூபாவை மோசடி செய்ததாகவும் மற்றொரு வர்த்தகர் ஒருவரிடமிருந்து 1000 அமெரிக்க டொலர்களை மோடி செய்ய முயன்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். இக்குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதாக அவரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஷிராஸ் நூர்தீன் கூறினார்.
அதன்பின் மேற்படி நைஜீரிய பிரஜைக்கு 5 வருடகாலத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து நீதவான் கனிஷ்க விஜேரட்ன தீர்ப்பளித்ததுடன் இரு குற்றங்களுக்கும் தலா 1500 ரூபா அபராதமும் விதித்தார்.
ஈ.எஸ்.பி.என். கிரிக்கெட் சபை நடத்திய லொத்தரில் 750,000 ஸ்ரேலிங் பவுண் பரிசு கிடைத்திருப்பதாக மேற்படி இலங்கையர்களுக்கு தொலைபேசியூடாக குறுந்தகவல் அனுப்பி மேற்படி நைஜீரிய பிரஜை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.