இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பலை விடுவிக்க கப்பம் கோரும் கடற்கொள்ளையர்கள்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும், இலங்கைக் கொடியுடன் எரிபொருள் ஏற்றிவந்த வர்த்தகக் கப்பலை விடுவிக்க கப்பம் கோரப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய கடற்படை தெரிவித்துள்ளது.

கப்பலை தேடும் பணிகளில் ஈடுபட்டுவரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட படகில் எட்டு பேர் அடங்கிய குழுவினர் பயணித்திருந்ததாகவும், அவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

மேற்படி கப்பலானது, இலங்கை அரசின் பதிவின் கீழ் சேவையில் ஈடுபடும் அரபு ராச்சியத்திற்கு சொந்தமான கப்பல் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும், குறித்த கப்பலுக்கும் இலங்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் கப்பலில் பணியாற்றிய இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்து கவனஞ்செலுத்தப்பட்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கப்பல் மாயமானமை தொடர்பிலான உண்மைகளை கண்டறியும் பணிகள், பிரான்ஸ் கடற்படையின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts