இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கான பந்துவீச்சுப் பயிற்றுநராக, தென்னாபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் வெள்ளை மின்னல் என அழைக்கப்படுபவருமான அலன் டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தொடருக்காக மாத்திரமே அவரது நியமனம், இப்போதைக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சுப் பயிற்றுநராக இருந்த கிறெய்க் மக்டேர்மர்ட், உலக இருபதுக்கு-20 தொடரைத் தொடர்ந்து தனது பதவியிலிருந்து விலகிய நிலையிலேயே, அப்பதவிக்கு அலன் டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைத் தொடருக்காக மாத்திரமே அவர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், முழுநேரத் தொழிலாக, அப்பதவியில் நியமிக்கப்பட்டால், மிகுந்த ஆர்வத்துடன் அதை ஏற்கவுள்ளதாக, அலன் டொனால்ட் தெரிவித்தார். நீண்டநாட்களுக்கு அப்பதவி கிடைக்குமாயின், அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்றுநரான டெரன் லீமனுடன் இணைந்து பணியாற்றுவதை, மிகவும் விரும்புவார் என அவர் தெரிவித்தார்.
தென்னாபிரிக்கா சார்பாக 72 டெஸ்ட் போட்டிகளிலும் 164 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடிய அலன் டொனால்ட், தனது ஓய்வின் பின்னர், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்குப் பந்துவீச்சுப் பயிற்சியை வழங்கியிருந்தார்.
இதேவேளை, இலங்கைத் தொடருக்கான துடுப்பாட்டப் பயிற்றுநராக ஸ்டுவேர்ட் லோ நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய பயிற்றுநரான கிரெக் பிளெவெட்டின் மனைவிக்குக் குழந்தை பிறக்கவுள்ள நிலையில், அவர் விடுமுறையில் உள்ளதன் காரணமாகவே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது