இலங்கைத் தேர்தலும்,ஆண் துணையின்றி வாழும் பெண்களின் நிலையும்

இலங்கையில் யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான நிவாரணங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் போதிய அளவுக்கு கிடைக்கவில்லை எனும் கவலைகள் தொடருவதாக பலர் தெரிவித்துள்ளனர்.

முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தத்தில் ஏராளமான பெண்கள் தங்களது கணவர், மகன், சகோதரன் ஆகியோரை இழந்துள்ளனர்.

அவர்கள் இன்றளவும் உடல் மற்றும் உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு ஆளாகியிருப்பதாக பலரை சந்தித்துள்ள பிபிசியின் செய்தியாளர் மாணிக்கவாசகம் கூறுகிறார்.

இடப்பெயர்வு, சொத்துக்கள் இழப்பு, வருமான நெருக்கடிகள் போன்றவை ஆண் துணையின்றி குடும்பத்தை நடத்தும் பெண்களை பெரிதும் வாட்டுகின்றன என அவர் கூறுகிறார்.

போரினால் ஏற்பட்டுள்ள காயங்கள் அவர்கள் மனதில் ஆறாத வடுக்களாகவே இன்னும் இருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது எனவும் பிபிசியின் செய்தியாளர் மாணிக்கவாசகம் கூறுகிறார்.

ஆண் துணையில்லாமல் பெண்கள் தலைமை வகிக்கும் குடும்பங்கள், போர் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆகியும், தொடர்ந்து சவால்களை எதிர்கொள்ள வேண்டியச் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும், காணாமல் போன அல்லது சரணடைந்த உறவுகளை தேடும் அவர்களது நடவடிக்கைகள் தொடர்கதையாகவே உள்ளன என்றும் அவர் சந்தித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன அல்லது சரணடைந்தவர்களின் நிலை குறித்த தகவல்கள் கிடைக்காதாது அவர்களின் கவலைகளில் மிகவும் முக்கியமாக உள்ளது.

அவ்வகையில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் பெண்களுக்கு, நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலும், அதன் முடிவுகளும் தீர்வைப் பெற்றுத் தருமா என்பதே அவர்கள் முன்னுள்ள கேள்வியாக இருக்கிறது.

Related Posts