இலங்கைத் தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்தும் போக்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விமர்சித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கு தலைமை வகிக்கும் கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்தும் போக்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விமர்சித்துள்ளார்.அண்மையில் நடந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில், அதன் தலைவர் இரா. சம்பந்தன் வெளியிட்ட சில கருத்துக்கள் தொடர்பில் தாம் முரண்படுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை (ஈபிஆர்எல்எஃப்) சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் சமபங்காளிகளாக கருதப்பட வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்கள் பொதுவான அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர்களை இப்போது தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் உள்வாங்கியிருப்பதன் மூலம் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சிதான் பிரதானமானது என்று கருதுவது தவறு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.கடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சி அடிப்படையில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களையே வென்றிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.இரா. சம்பந்தன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மற்றக் கட்சிகளிடத்திலும் மாறுபாடான கருத்துக்களே இருப்பதாகவும் பிரேமச்சந்திரன் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் நோக்கம் தம்மில் எவருக்கும் இல்லை என்று அந்தக் கூட்டமைப்புக்கும், அதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தலைமை தாங்கும் இரா.சம்பந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.நாட்டுக்கு உள்ளேயும் சர்வதேச மட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மையப்படுத்தியே நடவடிக்கைகளை தாங்கள் முன்னெடுத்துவருவதாகவும் அவர் கூறினார்.
‘மட்டக்களப்பில் நடந்தது தமிழரசுக்கட்சின் தேசிய மாநாடு, சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் நீண்டகால அரசியல் வரலாற்றைக் கொண்டிருக்கின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி பெரும்பான்மையான தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது’ என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

Related Posts