இலங்கைக்கெதிராக போராடுகிறது அவுஸ்திரேலியா

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கையணி, ஒரு விக்கெட்டு இழப்புக்கு 22 ஓட்டங்களைப் பெற்று, அவுஸ்திரேலிய அணியின் முதலாவது இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட இரண்டு ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.

CRICKET-SRI-AUS

தற்போது களத்தில், திமுத் கருணாரட்ன 8 ஒட்டங்களுடனும், கௌஷால் சில்வா ஆகியோர் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். வீழ்த்தப்பட்ட விக்கெட்டினை மிற்செல் ஸ்டார்க் கைப்பற்றினார்.

முன்னதாக, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 379 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக ஷோர்ன் மார்ஷ் 130 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 119 ஓட்டங்களையும் மிற்செல் மார்ஷ் 53 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலிய அணி முதலாவது விக்கெட்டினை 22 ஓட்டங்களுக்கு இழந்திருந்த நிலையில், இரண்டாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஷோர்ன் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் தமக்கிடையே 246 ஓட்டங்களைப் பகிர்ந்ததன் மூலமே அவுஸ்திரேலிய அணி, இலங்கையணியின் முதலாவது இனிங்ஸின் ஓட்ட எண்ணிக்கையை விட முன்னிலை பெற்றிருந்தது.

பந்துவீச்சில் இலங்கையணி சார்பாக ரங்கன ஹேரத் ஐந்து விக்கெட்டுகளையும் டில்ருவான் பெரேரா இரண்டு விக்கெட்டுகளையும் சுரங்க லக்மால், தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றியிருந்தனர்.

முன்னர், இலங்கையணி, தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 355 ஓட்டங்களைப் பெற்றது. தினேஷ் சந்திமால் 132 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 129 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில், மிற்செல் ஸ்டார்க் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

Related Posts