இலங்கைக்கு 800 மில்லியன் டொலர் வழங்கிய ரஷ்யா – பயன்படுத்தாமல் விட்ட அரசாங்கம்

ரஷ்யாவிடமிருந்து உதவிகளை பெறுவதற்கு கிடைத்த வாய்ப்புகள் எதுவும் இதுவரை இலங்கை பயன்படுத்தப்படவில்லை என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை – ரஷ்ய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் மற்றும் இலங்கை – ரஷ்ய நட்புறவு சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி நேற்று பிற்பகல் நடைபெற்றது. நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“ரஷ்யாவிடம் இருந்து மிகப் பெரிய திட்ட யோசனைகள் வந்தது. அவை ஒன்றையும் செயற்படுத்தவில்லை. நான் தூதராக இருந்த காலத்தில், நான் 18 இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டேன்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 800 மில்லியன் டொலர் நிதி வழங்கினார். இலங்கை அவை ஒன்றையும் பயன்படுத்தவில்லை.

இந்த 800 மில்லியன் டொலர் நிதி இரண்டு ஆண்டுகளாக வெளியுறவு அலுவலகத்தில் இருந்தது பின்னர் மறுபுறம் கொண்டு செல்லப்பட்டது.

நம் நாடு ரஷ்யாவிடமிருந்து நிறைய உதவிகளைப் பெற்றிருக்கலாம், ஆனால் இன்றுவரை அந்த வாய்ப்புகள் எதையும் நாங்கள் பயன்படுத்தவில்லை. நமது வெளியுறவுக் கொள்கை வேறொரு நாட்டினால் வடிவமைக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டேரி, “இன்று இலங்கை மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தற்காலிகமானது. இந்தப் பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும் என நம்புகிறேன். கூட்டு முயற்சிகள் மற்றும் கலந்துரையாடல் மூலம் எங்கள் இருதரப்பு உறவுக்கு நாங்கள் தொடர்ந்து பங்களிப்போம்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts