இலங்கைக்கு வெளியிலேயே கலப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்! – சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

இலங்­கையில் இடம்­பெற்­றுள்ள குற்­றங்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு ஐ.நா. அறிக்­கையில் கூறப்­பட்­டுள்ள கலப்பு விசேட நீதி­மன்றம் நாட்­டுக்கு வெளியி­லேயே அமைய வேண்­டு­மென்றும், இதில் சர்­வ­தேச தரப்­பி­னரே அதி­க­ளவில் பங்கேற்கவேண்­டு­மெ­னவும் வலி­யு­றுத்­தி­யுள்ளார் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்.

இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை ஆணை­யாளர் வெளியிட்­டுள்ள அறிக்கை குறித்து கருத்து வெளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறள்கள், மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் குறித்து சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்றே நடத்­தப்­பட வேண்­டு­மென நாம் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வந்­தி­ருந்தோம்.

இவ்­வா­றான நிலையில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் கடந்த கூட்­டத் ­தொ­டர்­க­ளின்­போது இலங்கை அர­சாங்­கத்­திற்கு பல்­வேறு அழுத்­தங்­களை பிர­யோ­கித்­த­போதும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் எவ்­வி­த­மான நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­காது காலம் கடத்தி வந்­தது.

இந் நிலையில் கடந்த ஆண்டு நடை­பெற்ற 28 ஆவது கூட்டத் தொட­ரின்­போது இலங்கை அர­சாங்­கத்தின் பொறுப்புக் கூறலை வலி­யு­றுத்தும் வகையில் அமெ­ரிக்கா தீர்­மா­னத்தை கொண்டு வந்­தது. அதற்கு சர்­வ­தேச நாடு­களும் ஆத­ர­வ­ளித்­தி­ருந்­தன.

இந் நிலை­யி­லேயே ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­ல­கத்­தினால் மூவர் கொண்ட குழு அமைக்­கப்­பட்டு இலங்­கையில் இடம்­பெற்ற பாரிய குற்­றங்கள் மீறல்கள் தொடர்­பாக சாட்­சி­யங்கள் பெறப்­பட்டு அறிக்கை தயார் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

கடந்த மார்ச் மாதம் இந்த அறிக்கை வெ ளியி­டப்­ப­டு­வ­தாக இருந்­த­போதும் இலங்­கையில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்­தினை தொடர்ந்து புதிய ஆட்­சி­யா­ளர்­களின் கோரிக்­கைக்­க­மைய அவ்­வ­றிக்கை வெளியி­டு­வது பிற்­போ­டப்­பட்­டது.

இவ்­வா­றான நிலையில் இங்கு பொதுத் தேர்­த­லொன்று இடம்­பெற்று கூட்­ட­ர­சாங்கம் அமைந்­தது. எனினும் புதிய அர­சாங்­கமும் சர்­வ­தேச விசா­ர­ணை­யையோ அல்­லது சர்­வ­தேச நிய­மங்­களின் கீழான உள்­ளக விசா­ர­ணையையோ ஏற்றுக் கொள்ள முடி­யா­தென அழுத்தந் திருத்­த­மாக அறி­வித்­தி­ருந்­தது.

இவ்­வா­றான நிலையில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்­ப­மான ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடரில் மூன்றாம் நாளான நேற்று முன்­தினம் இலங்­கையில் இடம்­பெற்ற விட­யங்கள் குறித்­தான ஐ.நா. மனித உரமை ஆணை­யாளர் அலு­வ­ல­கத்தின் அறிக்கை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேனால் வெளி­யி­டப்­பட்­டது.

அவ்­வ­றிக்­கையில் முழு­மை­யான சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று நடத்­தப்­பட வேண்­டு­மென்ற ஒட்­டு­மொத்த தமி­ழி­னத்தின் எதிர்­பார்ப்பு நிறை­வேற்­றப்­ப­டாமை ஏமாற்­ற­ம­ளிப்­ப­தா­க­வுள்­ளது.

எனினும் அந் அறிக்­கையில் மிக முக்­கி­ய­மாக இலங்­கையில் இடம்­பெற்ற குற்­றங்கள் தொடர்பில் கலப்பு விசேட நீதி மன்றம் அமைக்­கப்­பட்டு சுயா­தீ­ன­மான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. அத்­துடன் சர்­வ­தேச, தேசிய நீதி­ப­திகள் சட்­டத்­த­ர­ணிகள் விசா­ர­ணை­யா­ளர்கள் உள்­வாங்­கப்­பட வேண்டும் எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

உள்­ளக விசா­ர­ணை­யூ­டா­கவே தமி­ழர்­க­ளுக்கு நீதி வழங்­கு­வோ­மென அர­சாங்கம் தெரி­வித்­துள்ள நிலையில் ஐ.நா. அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ள மேற்­கு­றித்த முறை­மை­யூ­டாக எமக்கு ஓர­ள­வேனும் நீதியை பெற்றுக் கொள்­வ­தற்­கான வாய்ப்­புள்­ளது. இருப்­பினும் குறித்த கலப்பு விசேட நீதி­மன்­ற­மா­னது இலங்­கைக்கு வெளியி­லுள்ள நாடொன்­றி­லேயே அமைக்­கப்­பட வேண்டும். காரணம், போரின்­போது குற்­ற­மி­ழைத்­த­வர்கள் கட்­ட­ளை­யிட்­ட­வர்கள் தொடர்­பாக குறித்த நீதி­மன்­றத்தில் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­படும் போது அந் நீதி­மன்றம் உள் நாட்டில் அமைந்­தி­ருக்கும் பட்­சத்தில் பல்­வேறு அக புற அழுத்­தங்­க­ளுக்கு உட்­பட வேண்­டிய நிலை நிச்­சயம் ஏற்­படும்.

ஆகவே இலங்கை அல்­லாத நாடொன்றில் அந் நீதி­மன்றம் அமை­வதே பொருத்­த­மா­னது. அதே­நேரம் கலப்பு முறை­யென கூறப்­பட்­டி­ருப்­பதால் அந் நீதி­மன்­றத்­திற்­கான நீதி­ப­திகள், சட்­டத்­த­ர­ணிகள், விசா­ர­ணை­யா­ளர்கள், தேசிய ரீதி­யிலும் சர்­வ­தேச ரீதி­யி­லு­மாக 50 க்கு 50 என்ற விகி­தா­சா­ரத்­தி­லேயே தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

இந் நிலையில் தேசிய ரீதியில் உள் நாட்டைச் சேர்ந்த நீதி­ப­திகள் சட்­டத்­த­ர­ணிகள் விசா­ர­ணை­யா­ளர்கள் இடம்­பெ­று­வதால் முழு­மை­யான நியா­யமான விசா­ரணை இடம்­பெ­று­மென்றோ அல்­லது சுயா­தீ­ன­மாக அவ் விசா­ரணை அமை­யு­மென்றோ எதிர்­பார்க்க முடி­யாது. குறிப்­பாக வெற்றி வீரர்­க­ளாக காட்­டப்­பட்­டுள்ள இரா­ணு­வத்­தி­னரை, யுத்த வெற்றி யுக புரு­ஷர்­க­ளாக சித்­திரிக்­கப்­ப­டு­ப­வர்­களை ஒரு­போதும் தண்­டிப்­ப­தற்கு இலங்­கையை சேர்ந்த தரப்­பினர் விரும்­ப­மாட்­டார்கள்.

ஆகவே கலப்பு விசேட நீதிமன்றத்தில் அதிகளவான சர்வதேச தரப்பினரையே உள்ளீர்க்க வேண்டும். அதனூடாகவே இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஓரளவேனும் நீதியை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.

மேலும் இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்க பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இக் கூட்டத்தொடரில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் பங்கேற்றுள்ள அனைத்து தரப்பினரும் இவ் விடயத்தை பேரவையின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டியது அவசியமாகும் என்றார்.

Related Posts