இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று வகைக் கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது. இலங்கை – இந்திய அணிகள் மோதும் குறித்த தொடரானது எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது.
இங்கிலாந்தில் கடந்த 18 நாட்களாக நடைபெற்றுவந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது.
தற்போது இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 -ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், ஒரு இருபதுக்கு 20 போட்டியிலும் விளையாடவுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுடனான இந்தப் போட்டித் தொடர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இத்தொடர் முடிந்தவுடன் இந்திய அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இலங்கை வரும் இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 -ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு இருபதுக்கு 20 போட்டியிலும் விளையாடவுள்ளது. இத்தொடருக்கு முன்னர் இந்திய அணி, இலங்கை அணியுடன் இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் மோதவுள்ளது.
இந்திய அணிக்கெதிரான இந்தத் தொடருக்கு முன்பு சிம்பாப்வே அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
அதன்படி இம்மாத இறுதியில் இலங்கைவரும் சிம்பாப்வே அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது.
இந்தத் தொடர் முடிந்தவுடன் ஜூலை மாதம் 26ஆம் திகதி இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.
ஜுலை மாதம் 26- ஆம் திகதி ஆரம்பமாகும் இந்திய -– இலங்கை அணிகளுக்கிடையிலான தொடரானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6-ஆம் திகதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டிகள் கண்டி, காலி மற்றும் கொழும்பு எஸ்.எஸ்.ஸி.யிலும், ஒரு நாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகள் கொழும்பு, தம்புள்ளை மற்றும் பல்லேகலையிலும் நடைபெறவுள்ளன.