இலங்கைக்கு போகவேண்டாம்: இசைஞானியின் வீடு முற்றுகையிடப்படும்

இலங்கையில், இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கும் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் அவரது இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று, தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

இந்தப் போராட்டம் நாளை (14) நடைபெறும் என்று, இது குறித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம், வடக்கு மண்டல அமைப்பாளர் கரு அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“எதிர்வரும் ஜூலை மாதம், யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக, இசைஞானி இளையராஜா கலந்து கொள்கின்றார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (14), காலை 11 மணியளவில், இளையராஜாவின் வீட்டை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தப்படும்.

“இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை எதிர்த்தும் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும், தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அதைக் கருத்தில் கொள்ளாமல், இலங்கை அரசாங்கம், உலகை எமாற்றும், நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு, இசை நிகழ்வு நடத்துகின்றது. இந்நிகழ்வில் இளையராஜா பங்கு பற்றக்கூடாது என்று, முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.

“தமிழீழத்தில், இலங்கை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, இரவு பகலாக, பெண்கள், சிறுவர்கள் என்று, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று, காணாமல் போனவர்களின் உறவினர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“இந்நிலையில், அங்கு நடை பெற இருக்கும் இசை நிகழ்வில், இளையராஜா கலந்து கொண்டு, இசை நிகழ்வு நடத்துவது, தமிழர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதாக அமையும். எனவே, உலகத்தமிழர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து, இந்நிகழ்வை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts