இலங்கைக்கு தப்ப முயன்ற பெண், சிறுமி உட்பட அறுவர் கைது

இராமேஸ்வரம் அருகே, இலங்கைக்கு படகில் தப்ப முயன்ற பெண் ஒருவர் உட்பட ஆறு பேரை, ´கியூ´ பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.

srilankan-akathy

இவர்கள் வசமிருந்து 8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் தெற்கு கடற்கரை பகுதியில், ´கியூ´ பிரிவு பொலிசார் நேற்று அதிகாலை கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது படகில் இலங்கைக்கு செல்வதற்காக கடற்கரையில் காத்திருந்த சிவசுதர்சன் (26), அவரது 6 வயது மகள், மாமியார், மாமனார் உட்பட ஆறு பேர் சிக்கினர்.

இவர்களை ஊடுருவல் தடுப்பு சட்டத்தில் பொலிசார் கைது செய்தனர். 8 கிலோ கஞ்சாவை கடத்திச் செல்ல முயன்றதாகவும் வழக்குப் பதியப்பட்டது.

இதுகுறித்து ´கியூ´ பொலிசார் கூறியதாவது: இலங்கை தலைமன்னாரைச் சேர்ந்தவர் சிவசுதர்சன். மனைவி சுமித்ராவுடன் ஏற்பட்ட தகராறில், 6 வயது மகளுடன், செப்டம்பர் 14ல் சட்டவிரோதமாக படகில் இராமேஸ்வரம் வந்தார். அங்கிருந்து திருச்சி, பவானிசாகர் அகதி முகாமுக்கு சென்று, உறவினர்களுடன் தங்கினார்.

´தாயை பார்க்க வேண்டும்´ என மகள் கூறியதால், இலங்கையில் உள்ள மனைவியை, சிவசுதர்சன் தொடர்பு கொண்டார். மகளை இலங்கைக்கு அழைத்து வருமாறு கூறிய சுமித்ரா, ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்து படகு ஒன்றை ஏற்பாடு செய்தார். இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த பிரசாத் படகை ஓட்டி வந்தார். சிவசுதர்சனின் மாமனார் மாணிக்கம் உடன் வந்தார்.

பாம்பனில் இருந்து அகதிகள் இலங்கைக்கு தப்புவதாக கிடைத்த தகவல்படி, அக்டோபர் 1ம் திகதி இரவு, பாம்பன் குந்துகால் கடற்கரையில் காத்திருந்தோம். ஆனால், சிவசுதர்சன் உட்பட நான்கு பேரும் தங்கச்சிமடம் கண்ணுப்பாடு கடற்கரையில் காத்திருந்தனர். இரவு, 10:45 மணிக்கு படகு புறப்பட இருந்த நிலையில் இன்ஜின் பழுதானது.

இதனால் படகை சவுக்கு மர புதருக்குள் பதுக்கி வைத்து, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சென்று தங்கினர். இதற்கிடையே மற்றொரு படகை ஏற்பாடு செய்து அனுப்புமாறு சுமித்ராவிடம், சிவசுதர்சன் கூறினார். மறுநாள் இரவு கண்ணுப்பாடு சென்றபோது படகு வரவில்லை.

இதனால் பழுதான படகை சரி செய்ய முயன்றனர். சரி செய்ய முடியாததால் சென்னை சென்று விட்டனர். பழுதான படகு பொலிசில் சிக்கியது. இந்நிலையில் மற்றொரு படகை ஏற்பாடு செய்து தப்ப முயன்ற போது, நேற்று எங்களிடம் சிக்கினர். இவ்வாறு பொலிசார் கூறினர்.

Related Posts