இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் அவசியமற்றவை; வெளியுறவு அமைச்சு

539093_10152721694000198_805577834_nதமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் தேவையற்றவை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில், கடந்த மாதம் 27ஆம் திகதி இலங்கையை நட்பு நாடு என அழைக்கக்கூடாது, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழ் ஈழம் குறித்து இலங்கை தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், இந்த தீர்மானத்துக்கு இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் இலங்கை வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கையை நட்பு நாடாக கருதக்கூடாது என்ற சிலரின் கோரிக்கைகள், மன அமைதியை குலைப்பதாக உள்ளன. இந்திய–இலங்கை நட்புறவுக்கு இவை ஏற்றதாக இல்லை.

அத்துடன் தேவையற்ற, மிகைப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை கூறுபவர்கள், இலங்கையின் எதிர்காலத்துக்கு தீர்வாக அர்த்தமற்ற கோரிக்கைகளையும் எழுப்புபவர்கள்.

எனவே யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை இலங்கைக்கு நேரில் வந்து பார்க்குமாறு அழைப்பு விடுக்கிறோம். அதிலிருந்து தேசத்தை மறுகட்டுமானம் செய்யும் பணியில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அவர்கள் நேரில் பார்க்கட்டும்.

மேலும் தமிழ்நாட்டில், இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் தேவையற்றவை. அத்துடன் வெளிநாடுகளில் வசித்து வரும் இலங்கை தமிழர்கள் சிலர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது வருத்தம் அளிக்கிறது.

இலங்கை தமிழர்களுக்கு அரசியல் உரிமை பெற்றுத்தருவது என்ற போர்வையில், அவர்கள் இலங்கைக்கு எதிரான கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர்.

எங்களை பொறுத்தவரை, மனித உரிமை மீறல் புகார்கள் எல்லாம், வதந்தி மற்றும் தவறான தகவல்கள் அடிப்படையில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆகும்.

இதேவேளை, எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதாக வெளியாகும் தகவல்களும் தவறானவை.

எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை மனிதாபிமான முறையில் நடத்துமாறு இலங்கை கடற்படைக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Related Posts