இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: ஆஸ்திரேலிய அணிக்கு பிஞ்ச் கேப்டன்

இலங்கை அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி பிப்ரவரி 17-ந்தேதி மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியா அணி இந்தியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புனேயில் 21-ந்தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித், வார்னர், மேக்ஸ்வெல், கவாஜா, ஸ்டார்க், ஹசில்வுட், மேத் வடே போன்ற முக்கிய வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலியா அணி இந்திய தொடருக்காக முன்னதாகவே இந்தியா சென்றுவிடும்.

இதனால் இரண்டாம்நிலை வீரர்களை கொண்ட அணிதான் இலங்கைக்கு எதிராக விளையாட இருக்கிறது. தற்போது அந்த அணியை தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் வழிநடத்துவார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் கேப்டனாவதற்கு முன்பு டி20 அணி கேப்டனாக ஆரோன் பிஞ்ச் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts