இலங்கைக்குத் த்ரில் வெற்றி

இலங்கை, சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே புலவாயோவில் நேற்று புதன்கிழமை (23) இடம்பெற்ற போட்டியில், மயிரிழையில் ஓர் ஓட்டத்தால் வெற்றி பெற்ற இலங்கையணி, இத்தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

CRICKET-SRI-WIS

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர், தமது அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளையிழந்து 330 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், இலங்கையணி சார்பாக குசல் மென்டிஸ் 94(73), நிரோஷன் டிக்வெல்ல 94(106), தனஞ்சய டி சில்வா 58(60) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக ஜேஸன் ஹோல்டர் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

331 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கோடு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளையிழந்து 329 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஓர் ஓட்டத்தால் தோல்வியடைந்தது.

இரண்டு விக்கெட்டுகள் கைவசம் இருந்த நிலையில், இறுதி ஓவரில் 10 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என இருந்தது. இறுதி ஓவரை நுவான் பிரதீப் வீசினார். யோக்கர் முறையான முதலாவது பந்தில் ஒரு ஓட்டத்தையே ஹோல்டர் பெற்றார். இரண்டாவது பந்தில் ஓட்டமெதுவையும் பெறாத சுலைமான் பென், மூன்றாவது பந்தில் ஆறு ஓட்டங்களைப் பெற்றார். எனவே மூன்று பந்துகளில் மூன்று ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலை காணப்பட்டது.

இந்நிலையில், நான்காவது பந்தில் ஓட்டமெதுவையும் பெறாத பென், ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார். ஆக, இறுதிப் பந்தில் மூன்று ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலை காணப்பட்டது. இந்த நிலையில், நடு விக்கெட்டினை இலக்கு வைத்து பிரதீப் வீசிய யோக்கர் முறைமையிலான பந்தில், ஹோல்டரினால் ஓர் ஓட்டம் மாத்திரமே பெறப்பட, ஓர் ஓட்டத்தினால் இலங்கையணி த்ரில் வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தனது முதலாவது சதத்தைப் பெற்ற எவின் லூயிஸ் 148(122) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், இலங்கையணி சார்பாக, சுரங்க லக்மால், நுவான் குலசேகர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக குசல் மென்டிஸ் தெரிவானார்.

Related Posts