இலங்கை அரசுக்கும் மாலைதீவு அரசுக்குமிடையில் 03 இருதரப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் நேற்று (25) மாலை மாலைதீவு நகர ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மற்றும் மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல் கயூம் (Abdulla Yameen Abdul Gayoom) அவர்கள் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டது.
முதலாவது சுகாதார துறையின் அபிவிருத்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையாகும்.இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்களும் மாலைதீவின் சுகாதார மற்றும் ஆண் பெண் சமூகநிலை தொடர்பான அமைச்சர் திருமதி மாரியாம் ஷகீலா (Mariyam Shakeela) அவர்களும் அதில் கையொப்பமிட்டனர் சுகாதார துறையில் சிறப்பறிஞர்களையும் பயிற்சிபெற்ற பணியாளர்களையம் பரிமாறிக்கொள்தல், தாதிமார் பயிற்சி மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குதல் என்பவை இதன்மூலம்
எதிர்பார்க்கப்படுகின்றது.
இரண்டாவது இலங்கை முதலீட்டு சபைக்கும் மாலைதீவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கும் இடையிலான உடன்படிக்கையாகும். இரு நாடுகளுக்குமிடையிலான முதலீட்டை ஊக்குவிப்பது அதன் அடிப்படை நோக்கமாகும். அதில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்களும் மாலைதீவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மொஹமட் சயீட் ((Mohamed Saeed) அவர்களும் கையொப்பமிட்டனர்.
தேடல் மற்றும் காப்பாற்றல் சேவைகளின் இணைப்பாக்கத்திற்கான மூன்றாவது உடன்படிக்கையில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்களும் மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் திருமதி துன்யா மௌமூன் (Dunya Maumoon) அவர்களும் கையொப்பமிட்டனர். கடலில் விபத்துக்குள்ளாகின்றவர்களை தேடல் மற்றும் அவர்களை காப்பாற்றும் பணிகளை இணைப்பாக்கம் செய்தல் இதில் உள்ளடங்குகிறது.
உயர் கலவி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க, வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ.எச்.எம்.அஸ்வர், உதித்த லொக்குபண்டார, லொஹான் ரத்வத்தே, ரஞ்சித் த சொய்சா,தேனுக்க விதானகமகே, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி ஷெனுக்கா செனவிரத்ன ஆகியோரும் இந் நிகழ்வில்
கலந்துகொண்டனர்.