இறைச்சிக்காக மாடுகள் வெட்டுவதைத் தடை செய்ய நடவடிக்கை!

இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படுவதை முற்றாகத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மாட்டிறைச்சி தேவைப்படுவோருக்காக வெளிநாடுகளிலிருந்து அதனை இறக்குமதி செய்ய முடியும் என்றும், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாட்டுப் பொங்கல் பண்டிகையில் முக்கியத்துவம் பெறும் ஒரு விலங்கு என்பதுடன் மத ரீதியிலும் மக்கள் வாழ்விலும் பெரும் மதிப்பைப் பெறும் விலங்குமாகும்.

அதனை இறைச்சிக்காக கொன்று பயன்படுத்துவது ஏற்க முடியாதது. நான் ஒரு பௌத்தன் என்ற வகையிலும் எந்த மாமிசமும் உண்ணாதவன் என்ற வகையிலும் இலங்கையில் மட்டுமன்றி உலகில் வேறு எந்த நாட்டிலும் மாடுகள் இறைச்சிக்காக கொல்லப்படுவதை விரும்பமாட்டேன்.

எனினும் மாட்டிறைச்சி உணவுக்காக தேவைப்படுவோருக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது தொடர்பில் உத்தேசித்துள்ளோம்.

அதேபோன்று மாடுகள் ஏற்றிச் செல்லும் போக்குவரத்துக்கான சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் நிதியமைச்சர் மற்றும் வர்த்தக அமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று களுத்துறை பயாகலை இந்து வித்தியாலயத்தில் இடம்பெற்ற அனைத்து இன, மத மக்களும், மாணவர்களும், மதத் தலைவர்களும் கலந்து கொண்ட ஒருமைப்பாட்டு பொங்கல் விழாவில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Related Posts