இறுதி யுத்தத்தில் 7 ஆயிரத்து 700 பேர் வரையானோரே கொல்லப்பட்டிருக்கலாம் என காணாமற் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அவர் கருத்து வெளியிட்டபோதே மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
2011 இல், ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்த மர்சுகி தருஸ்மன் தலைமையிலான நிபுணர் குழுவின் அறிக்கையில் இறுதிப் போரில் 40 ஆயிரம் பேர் இறந்தனர் எனக் கூறப்பட்டது.
ஆனால் அவ்வளவு பேர் கொல்லப்படவில்லை. போர்க்காலத்தில் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பாக எமது ஆணைக்குழு இதுவரை துல்லியமான எண்ணிக்கையைக் கண்டறியவில்லை.
எனினும் மோதல் பிரதேசத்தில் புள்ளிவிவரவியல் திணைக்களம் வீடு வீடாக நடத்திய கணக்கெடுப்பு மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கைகளில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 700 இற்கு அண்மையாக இருக்கலாம்.
ஆனாலும் எமது ஆணைக்குழு இதபற்றிய துல்லியமான எண்ணிக்கை பற்றிய முடிவு எதற்கும் வரவில்லை. ஆனால் 40 ஆயிரம் என்பது மிகையான கணிப்பு’ – என்றார்.