இறுதி யுத்தத்தில் 40,000 பேர் கொல்லப்பட்டனர் எனக் கூறுவதில் எந்தவித உண்மையுமில்லையெனவும், அதற்கான ஆதாரம் எதுவும் இல்லையெனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மகிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இராணுவத்தினர் பொதுமக்களை இலக்குவைத்து பயங்கரவாதிகளைக் கொல்லும் நடவடிக்கையில் ஈடுபடவில்லையெனவும் பொதுமக்களைக் காப்பாற்றியே பிரச்சனைக்குத் தீர்வு கண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். சிலர் தனிப்பட்ட ரீதியில் குற்றமிழைத்தால் விசாரணை நடாத்தி அரசாங்கம் அவர்களைத் தண்டிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மீண்டும் பயங்கரவாதச் செயல்கள் இடம்பெறாமல் அரசாங்கம் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கையில், அதற்கு குந்தகம் விளைவிக்க ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.
அந்தவகையிலே, யுத்தக் குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை இணைத்து நாட்டின் அரசியலமைப்புக்கு முரணான வகையில் செயற்படமுடியாது எனவும் தெரிவித்துள்ளதுடன், யுத்தக் குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் இணைத்துக்கொள்ளப்படமாட்டார்கள் என சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தெரிவித்துள்ள நிலையில், அதுவே அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு எனவும் தெரிவித்துள்ளார். இவர்களைத் தவிர்த்து ஏனையோர் வெளியிடும் கருத்துக்கள் யாவும் அவர்களின் தனிப்பட்ட கருத்தே யெனவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்தக் கருத்தானது, நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களின் நம்பிக்கையைச் சிதறடித்துள்ளதாக சமூகச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.