உயர் மட்டத்தின் உத்தரவுகளினால் இராணுவம் தவறிழைத்திருக்கலாம் எனவும் அவை தொடர்பில் விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிவதில் தவறில்லை எனவும் இராணுவம் குற்றமிழைத்திருந்தால் அதன் உண்மைத்தன்மை தொடர்பில் தெரிந்து கொள்ள முயற்சிப்பதில் எவ்வித தவறும் கிடையாது எனவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக்குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைக் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக தேசிய ஊடகம் ஒன்ற செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ‘உலகிலுள்ள இராணுவத்தினரில் இலங்கை இராணுவம் ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்கும் இராணுவமாகும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதன் காரணமாக கடந்த காலங்களில் சமாதான படைகளில் எமது படையினர் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் உயர் மட்டங்களிலிருந்து கிடைத்த உத்தரவுகளால் குற்றங்களை செய்திருக்கலாம். எனவே அதன் உண்மைத் தன்மை தொடர்பில் விசாரித்து அறிவதில் எந்தவிதமான தவறும் இல்லை.
சர்வதேச விசாரணைகள், கலப்பு நீதிமன்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தேவைப்பட்டால் சர்வதேச ஆலோசனைகள் பெறப்படும். இதுவொன்றும் புதிய விடயமல்ல.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா, லலித் அத்துலத் முதலி கொலை செய்யப்பட்ட போது வெளிநாட்டு ஆலோசனைகள் பெறப்பட்டன. அது மட்டுமல்ல மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்திலும் வெளிநாட்டு ஆலோசனைகள் பெறப்பட்டன.
எனவே இன்று அரசியல் முகவரிகளை இழந்த சிலர் இதனை திரிபுபடுத்துகின்றனர். மஹிந்த ராஜபக்ஷவுடன் எனக்கு தனிப்பட்ட குரோதம் கிடையாது. பழிவாங்கும் எண்ணமும் கிடையாது. இன்று அவர் என்னிடம் கேட்டு பல உதவிகளை (சட்ட பூர்வமான) செய்து கொடுத்துள்ளேன்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ். டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் பெயரை அழித்து டி.ஏ.ராஜபக்ஷதான் கட்சியை உருவாக்கினார் என்ற மாயையை ஏற்படுத்த மஹிந்த முயற்சித்தார்.
அத்தோடு அடிப்படைவாதிகளை கட்சிக்குள் உள்ளீர்த்தார். பிளவுபடுத்தும் முயற்சிகள் இவர்களால் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாகவே சுதந்திரக்கட்சி தோல்வியை நோக்கிச் சென்றது.” என்றும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.