இறுதி ஓவரில் போட்டியின் திசையை மாற்றியது நடுவரா? ; ஏமாற்றமடைந்த இங்கிலாந்து

இந்திய அணிக்கெதிராக நேற்று இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் நடுவரின் தீர்ப்பு பாரிய ஏமாற்றத்தை அளித்துள்ளதாக இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இறுதிப்பந்து ஓவருக்கு 8 ஓட்டங்கள் மாத்திரம் பெறவேண்டிய நிலையில் நடுவர் ஜோ ரூட்டுக்கு வழங்கிய ஆட்டமிழப்பானது அணிக்கு ஏமாற்றமளித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜோ ரூட் 38 பந்துகளுக்கு 38 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் கடைசி ஓவரின் முதல் பந்து அவரது துடுப்பு மட்டையில் பட்டு காலில் படுவதனை அவாதானிக்க முடிந்தது.

எனினும் கள நடுவர் சம்சுடீன் ஆட்டமிழப்பு வழங்கினார். இந்த ஆட்டமிழப்பானது போட்டியில் இங்கிலாந்து அணிக்கு இருந்த வெற்றிவாய்ப்பை திசைமாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கள நடுவர் சம்சுடீன் இந்திய அணி துடுப்பெடுத்தாடும் போது விராட் கோஹ்லியின் ஆட்டமிழப்பினை வழங்கவில்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விராட் கோஹ்லி 7 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஜோர்தன் வீசிய பந்து அவரது காலில் பட்ட நிலையில், இங்கிலாந்து அணியால் ஆட்டமிழப்பு கோரப்பட்டபோதும் ஆட்டமிழப்பை கள நடுவர் வழங்கியிருக்கவில்லை.

எவ்வாறாயினும் நடுவர் தொடர்பிலான கருத்துக்கள் கொண்ட அறிக்கை ஒன்றினை இறுதி இருபதுக்கு-20 போட்டிக்கு முன்னர் போட்டி நடுவரிடம் கையளிக்கவுள்ளதாக இயன் மோர்கன் தெரிவித்தார்.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 144 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 139 ஒட்டங்களை மட்டும் பெற்று 5 ஒட்டங்களால் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts