இறுதிப்போரில் பங்காற்றிய ‘மிக்27’ போர் விமானங்கள் சுதந்திர தின அணிவகுப்பிலிருந்து நீக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப்போரில் முக்கிய பங்காற்றிய மிக்27 விமானங்களோ, எம்.ஐ.24 தாக்குதல் உலங்கு வானூர்திகளோ சுதந்திர தின அணிவகுப்பில் இன்று பங்கேற்காது. இந்தத் தகவலை விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் சந்திம அல்விஸ் உறுதிப்படுத்தினார்.

இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலிமுகத்திடலில் இன்று பிரமாண்டமான முறையில் கொண்டாடப்படவுள்ளது.

கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்ற பின்னர், ஜனாதிபதியின் உரை இடம்பெறும். அதன்பின்னர் முப்படைகளின் பலத்தை வெளிப்படுத்தும் பாரிய இராணுவ அணிவகுப்புகள் இடம்பெறும்.

இராணுவத்தின் பீரங்கிகள், டாங்குகள், கவசவாகனங்கள், ரேடர்கள் உள்ளிட்ட போர்த் தளபாடங்களும், விமானப்படையின் போர் விமானங்கள், உலங்கு வானூர்திகளும், கடற்படையின் போர்க்கப்பல்களும் இந்த இராணுவ அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளன. மிக் 27 போர் விமானங்களோ, எம்.ஐ24 தாக்குதல் உலங்கு வானூர்திகளோ பங்கேற்காது.

“இவற்றின் சேவைக்காலம் முடிவடைந்துவிட்டதால், புனரமைப்புப் பணிகள் இடம்பெறுகின்றன. இவை மீண்டும் சேவையில் ஈடுபடாது” என்று விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்தார் .

எனினும், விமானப்படையின் அணிவகுப்பில், பெல் 212, பெல் 412, எம்,ஐ. 17 உலங்கு வானூர்திகள், வை12, பீச் கிராப்ட், சி130, அன்டரோவ்32, எம்ஏ60 விமானங்களும், கே8 கிபிர், எவ்7 ஜெட் விமானங்களும் பங்கேற்கவுள்ளன.

12ஆவது இலக்க ஜெட் ஸ்குவாட்ரனில் இடம்பெற்றுள்ள மிக் 27 போர் விமானங்கள், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றியிருந்தன. நான்காவது கட்ட ஈழப்போரில், இந்தப் போர் விமானங்கள் 854 தாக்குதல் பறப்புகளை மேற்கொண்டிருந்தன என்றும், 1980களில் தயாரிக்கப்பட்ட மிக் 27 போர் விமானங்களை இலங்கை 2000 ஆண்டுகளில் கொள்வனவு செய்திருந்தது என்றும் விமானப்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts