இறுதிப்போரில் காணாமல் போனவர்களுக்கு, இந்தியா மற்றும் ஐ.சி.ஆர்.சி.யே பொறுப்பு: பாதுகாப்பு செயலாளர்

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு தரப்பினரால் பதியப்பட்டு பொறுப்பேற்கப்பட்ட எவரும் காணாமல் போகவில்லை’ என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்தவர்கள், இந்திய வைத்தியசாலைகள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி) ஆகியவற்றினூடாகவே வருகை தந்தனர். எனவே அவர்களிடம் போய்ச் சேர்ந்தவர்கள் தொடர்பில் இந்தியாவும் ஐ.சி.ஆர்.சி.யுமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இராணுவ தளபதியினால் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணைச் சபையின் அறிக்கை, பாதுகாப்பு செயலாளரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று முற்பகல் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது, காணாமல் போனோர் தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

‘யுத்தம் இடம்பெறும் நாடொன்றில் காணாமல் போதல், உயிரிழத்தல், காயமடைதல் என்பவை சாதாரணமானவை. கடந்த 30 வருடங்களாக நிலவிய யுத்தம் காரணமாக இராணுவத்தைச் சேர்ந்த மூவாயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களுக்கு என்ன நடந்தது என்று இதுவரையில் தெரியாது.

இதேவேளை, யுத்தம் இடம்பெற்ற இறுதி இரண்டரை வருட காலப்பகுதியில் இராணுவத்தைச் சேர்ந்த 6 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 20 ஆயிரம் பேர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் அங்கவீனமுற்றுள்ளனர்.

குறிப்பிட்டதொரு பிரதேசத்தில் இரு தரப்பினர்களுக்கிடையில் யுத்தம் இடம்பெறும் போது அப்பகுதியில் சிக்குண்டுள்ளவர்கள் மரணிக்க வாய்ப்பு உண்டு. அல்லது காணாமல் போக வாய்ப்புண்டு. யுத்த காலத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் வடக்கில் 100 சதவீதான நிலப்பரப்பு ஆட்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கென பலர் பலவந்தமாக அவ்வியக்கத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இவர்கள் யுத்தத்தின் போது இறந்திருக்கலாம். ஆனால், இதுவரை அவர்கள் தொடர்பில் தகவல்கள் இல்லை.

இறுதி யுத்தத்தின் போது இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்த மக்களை முதலில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் இந்திய வைத்தியசாலைகளுமே பொறுப்பேற்றன. அவையே பின்னர் அம்மக்களை பாதுகாப்பு தரப்பினரிடம் அழைத்து வந்தன. இவ்வாறு பாதுகாப்பு தரப்பினரிடம் அழைத்து வரப்பட்டவர்கள் பதியப்பட்டே பொறுப்பேற்கப்பட்டனர்.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட எவரும் இதுவரையில் காணாமல் போகவில்லை. அவ்வாறு காணாமல் போயிருப்பார்களாயின் அது இந்திய வைத்தியசாலைகளிடமோ அல்லது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமோ சரணடைந்த போதோ அல்லது அதற்கு முன்னரோ காணாமல் போயிருக்க வேண்டும்’ என்றார்.

LLRC_Report_3

Related Posts