இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளுக்கான பிரார்த்தனைகள்

வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் உயிரிழந்த உறவுகளுக்கு கீரிமலை புனித தீர்த்தக்கரையில் உள்ள குழந்தைவேல் சுவாமிகள் ஆலயத்தில் 17, 18, மற்றும் 19 ஆகிய திகதிகளில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை சைவ மகா சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சைவ மகா சபையால் வெள்ளிக்கிழமை (15) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்த மூன்று தினங்களிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் விசேட வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுமாறும் சைவத் தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

வன்னியில் உயிரிழந்தோரை நினைவுகூருகின்ற அதேவேளை அவர்களின் இறப்பினால் ஆதரவற்றிருக்கும் குடும்பங்களுக்கு உதவுகின்ற, அவர்களை ஆறுதல்படுத்துகின்ற செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைத்து எதிர்வரும் 18 ஆம் திகதி பல்வேறு பிரார்த்தனை நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் சைவ மகா சபை 17, 18 மற்றும் 19 ஆகிய மூன்று தினங்கள் கீரிமலையில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளது.

இறந்தோருக்கு ஆத்மசாந்திக் கிரியைகள் செய்யும் கீரிமலை புண்ணிய கடற்கரையில் உள்ள குழந்தைவேல் சுவாமி ஆலயத்தில் இந்த மூன்று தினங்களும் பிராhத்தனைகள் இடம்பெறும். இங்கு செந்தமிழ் திருமறையில் அர்ச்சனை இடம்பெறுவதுடன் 1008 போற்றிகளால் இறைவனை அர்ச்சிக்கும் வழிபாடுகளும் இடம்பெறும்.

வன்னிப் போரில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் எவரும் இந்த வழிபாடுகளில் கலந்துகொண்டு தமது உறவுகளின் ஆத்ம சாந்திக்காக கீரிமலை புனித நீரை ஏந்தி வந்து இறைவனுக்கு முழுக்காட்டி வழிபாடு செய்ய முடியும். இந்த நாட்களில் வடக்கு, கிழக்கு எங்கும் உள்ள ஆலயங்கள் மற்றும் வீடுகளிலும் இவ்வாறான ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு சைவத் தமிழ் மக்களிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும், இந்த மூன்று தினங்களிலும் வழிபாடுகள், பிரார்த்தனைகளுடன் மட்டும் நின்றுவிடாமல் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு உதவி செய்யும் திட்டங்களையும் ஆரம்பிக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றோம்.

வன்னிப் போரில் உயிரிழந்தவர்களின் ஏராளமான உறவினர்கள் அன்றாட உணவுக்கே பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். இவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகள் இந்த நினைவு தினத்திலாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts