ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.
20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா-வங்காளதேசம் இடையிலான இறுதிஆட்டம் மிர்புரில் நேற்றிரவு நடந்தது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. இதனால் போட்டி 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்திய அணியில் முந்தைய ஆட்டத்தில் ஓய்வு எடுத்த அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, நெஹரா ஆகியோர் திரும்பினர். காயமடைந்த வங்காளதேசத்தின் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் உடல்தகுதி பெற்றதால், அந்த அணியில் இடம் பிடித்தார்.
‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் டோனி முதலில் வங்காளதேசத்தை பேட் செய்ய அழைத்தார். இதன்படி முதலில் களம் இறங்கிய வங்காளதேச அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. சவும்யா சர்கர் 14 ரன்னிலும், தமிம் இக்பால் 13 ரன்னிலும், ஷகிப் அல்-ஹசன் 21 ரன்னிலும், 50-வது ஆட்டத்தில் பங்கேற்ற முதல் வங்காளதேச வீரர் என்ற சிறப்புடன் ஆடிய முஷ்பிகுர் ரம் 4 ரன்னிலும், கேப்டன் மோர்தசா ரன் ஏதுமின்றியும் ஆட்டம் இழந்தனர்.
12 ஓவர்களில் வங்காளதேச அணி 5 விக்கெட்டுக்கு 78 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் அந்த அணியை இந்திய பவுலர்கள் 100 ரன்களுக்குள் அடக்கி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நெஹராவும், ஹர்திக் பாண்ட்யாவும் கடைசி நேரத்தில் ரன்களை வாரி வழங்கி விட்டனர்.
நெஹரா வீசிய ஆட்டத்தின் 13-வது ஓவரில் சபிர் ரகுமான், மக்முதுல்லா ஜோடி 2 பவுண்டரி உள்பட 14 ரன்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து 14-வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சில் மக்முதுல்லா 2 சிக்சரும், ஒரு பவுண்டரியும் நொறுக்கி உள்ளூர் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்தார். அந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள் அவர்களுக்கு கிடைத்தது. இறுதி ஓவரில் பும்ரா 7 ரன்களுடன் கட்டுப்படுத்தினார்.
நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் வங்காளதேச அணி 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் சேர்த்தது. மக்முதுல்லா 33 ரன்களுடனும் (13 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), சபிர்ரகுமான் 32 ரன்களுடனும் (29 பந்து, 2 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தனர். இந்திய தரப்பில் நெஹரா, அஸ்வின், பும்ரா, ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
பின்னர் 121 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. ரோகித் சர்மா (1 ரன்) முதல் ஓவரிலேயே கேட்ச் ஆனார். அடுத்து துணை கேப்டன் விராட் கோலி நுழைந்தார். தவானும், கோலியும் பொறுப்பாக விளையாடி வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர்.
அணியின் ஸ்கோர் 99 ரன்களை எட்டிய போது ஷிகர் தவான் 60 ரன்களில் (44 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து கேப்டன் டோனி வந்தார். தனக்கே உரிய ஸ்டைலில் ஆடிய டோனி, 14-வது ஓவரில் பவுண்டரி, 2 சிக்சருடன் ஆட்டத்தை தித்திப்புடன் நிறைவு செய்தார்.
இந்திய அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டு ஆசிய மகுடத்தை சூடியது. 6-வது முறையாக இந்த கோப்பையை வென்று (50 ஓவர் போட்டியையும் சேர்த்து) சாதனையும் நிகழ்த்தியது. கோலி 41 ரன்களுடனும் (28 பந்து, 5 பவுண்டரி), டோனி 20 ரன்களுடனும் (6 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர்.