இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் தேங்காயிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பாம் எண்ணெய் கலக்கப்படுவதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பொதுமக்களை தெளிவுபடுத்தும் வகையிலான செயற்திட்டமொன்றினை சுகாதார அமைச்சுடன் இணைந்து மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துவைத்தது.
இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்பகட்ட நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இதன்போது பால்மாவினால் ஏற்படும் ஆபத்தான விளைவுகள் தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் வகையிலான காணொலியொன்று காட்சிப்படுத்தப்பட்டதுடன் , துண்டறிக்கைகளும் விநியோகிக்கப்பட்டன.
இதன் போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜெயசிங்க தெரிவித்ததாவது;
குழந்தைகளுக்கு தாய்பால் இன்றியமையாதது என உலக சுகாதார அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது. அந்த வகையில் குழந்தைகளுக்கு தாய்பாலை கொடுத்தல் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு சில செயன்முறைகளை வகுத்துள்ளது.
அண்மையில் இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் , அதன் செயன்முறைகளை சரிவர கடைப்பிடிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது.
கடின முயற்சியின் விளைவாகவே இந்த மட்டத்தை அடைந்து கொள்ள கூடியதாகவிருந்தது. சுகாதார அமைச்சினால் இது தொடர்பில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அத்தகைய வேலைத்திட்டங்களின் விளைவாகவே, அந்த மட்டத்தை அடையக்கூடியதாகவிருந்தது.
பண்டைய காலத்தில் மக்கள் தமது வீடுகளில் உள்ள பசுக்களின் பாலை குடித்தனர். அதன் காரணமாக ஆரோக்கியமாக வாழக்கூடிய நிலமை காணப்பட்டது.
ஆயினும் மனித நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக பால்மாவினை உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல நோய்கள் ஏற்படும் ஆபத்தான நிலமை ஏற்பட்டுள்ளது.
ஆகவே , பால்மா பாவனையினை குறைத்துக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இளநீர் பயன்பாடும் சிறந்த ஆரோக்கியத்தை தரும். பால் மா அத்தியாவசியமானதொன்றல்ல.
மகாவலி அபிவிருத்தி திட்டம் நீர்வழங்கல் திட்டத்திற்காக மாத்திரம் ஆரம்பிக்கப்பட்ட விடயம் அல்ல. மாறாக , பால் உற்பத்தியாளர் , விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலான திட்டமும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் ஊடாக குறித்த திட்டம் சரிவர நடைமுறைப்படுத்தப்பட்டாமை கவலை அளிக்கின்றது – என்றார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய மருத்துவ நிபுணர்கள், இறக்குமதி செய்யப்படும் பால்மாவினால் தொற்றாத நோய்கள் ஏற்படும் ஆபத்தான நிலமை ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன என்று தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜெயசிங்க , அரசாங்க மருத்ததுவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சிறப்பு மருத்துவ நிபுணர் அனிருத்த பாதனிய , அதன் செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கே , உப செயலாளர் வைத்தியர் நவீன் சொய்சா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.