எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரு பிரதேச சபைத் தேர்தலுக்காக போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் தங்களது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை இன்று புதன்கிழமையுடன் நிறைவு செய்ய வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இன்றுவரைக்கும் எதுவிதமான தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றதாக எங்கும் பதிவாகவில்லை.
இன்று புதன்கிழமை நள்ளிரவு 12மணியுடன் சகல அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை 27ஆம் திகதி காலை முதல் கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்படும்.
இம்முறை மிகவும் அமைதியான முறையில் தேர்தலை நடத்த எதிர்பார்க்கின்ற போதிலும் அதற்கு பொதுமக்கள் உள்ளிட்ட சகலரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.