வடமாகாணக் கபடிப் போட்டிகளிலிருந்து கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியினையும் வவுனியா பரக்கும் குளம் மகா வித்தியாலய அணியினையும் நீக்குவதாக வட மாகாண கல்வித் திணைக்கள பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன் அறிவித்தார்.
வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வட மாகாண விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த மே மாதம் 24ஆம் திகதி முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் இடம்பெற்ற 19 வயதுப் பிரிவு ஆண்கள் கபடிப் போட்டி இறுதிச் சுற்றில் மேற்படி இரு அணிகளும் மோதியிருந்தன.
இதில் இரு வீரர்களுக்கிடையில் முரண்பாடு வரவே, இரு அணி வீரர்களும் பரஸ்பரம் சண்டையிட்டுக் கொண்டனர். தொடர்ந்து, இந்த சண்டை பெரிதாகி இரு அணிகளின் ஆதரவாளர்களும் சண்டையிட்டுக்கொள்ள, இதனைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் பொலிஸார் அழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து இறுதிப் போட்டியும் ரத்து செய்யப்பட்டு மிகுதிப் போட்டிகள் முடிவுற்றன. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தீர்மானம் எடுக்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை (10) யாழில் இடம்பெற்றது. இதில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மேற்குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, மேற்குறித்த பாடசாலைகளின் அணிகளுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக வடமாகாணக் கபடி அணிகளிலிருந்து மேற்குறித்த இரு பாடசாலை அணிகளையும் நீக்குவது என தீர்மானம் எடுக்கப்பட்டு, அதனை அனைவரும் ஒருமித்து ஏற்றுக்கொண்டதாக சத்தியபாலன் மேலும் தெரிவித்தார்.