அளுத்கமையில் நேற்று முதல் இடம்பெற்றுவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த 60இற்கும் மேற்பட்டோரில் அறுவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் அஸ்லம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் தற்சமயம் தர்ஹாநகர் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அவருடன் அஸ்லம் எம்பியும் சென்றுள்ளார். இந்நிலையிலேயே களநிலவரம் பற்றி பேசும்போதே மேற்படி குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்,
25இற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான வீடுகள் முற்றாக எரயூட்டப்பட்டுள்ளன. இவைதவிர மேலும் பல வீடுகள் சிறியளவில் சேதமடைந்துள்ளன. இதேவேளை, இன்று அதிகாலை வல்பிட்டி பள்ளிவாசலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் பலியாகியுள்ளனர். மேலும் அறுவரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. சிறு காயங்களுக்கு உள்ளான நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் இங்கு குழுமியிருக்கிறார்கள்.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதிலும், பாதுகாப்பு படையினர் புடைசூழ நின்றிருந்த வேளையிலுமே மேற்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதனால், காவல் துறையினர்மீது நம்பிக்கையிழந்தவர்களாக எம் மக்கள் காணப்படுகிறார்கள்.
இதேவேளை, இன்று அதிகாலை எமது கட்சித் தலைவர் ரவூக் ஹக்கீம் வீட்டில் கூட்டமொன்று நடைபெற்றது. அனைத்து பிரதேசங்களிலிருந்தும் முக்கியஸ்தர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் செயலினை வன்மையாகக் கண்டித்தனர். இந்நிலையில், அனைவரையும் அமைதி காக்குமாறும், தம்மை பாதுகாத்துக்கொள்ளும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுரை வழங்கியதுடன், அரசாங்கத்துடன் உள்ள உறவுநிலை தொடர்பில் நல்லமுடிவொன்று எடுக்கப்படுமெனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
தற்சமயம் தர்ஹாநகரின் பெரு வீதிகள் அனைத்தும் வெறிச்சோடிப் போயுள்ள போதிலும், கிராமத்துக்குள் இருக்கும் சில பகுதிகளில் குழப்பங்கள் நிகழ்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவை தொடர்பிலும் அமைச்சர் ஹக்கீமுடன் நானும் சென்று பார்வையிடவுள்ளேன் எனவும் அஸ்லம் எம்.பி. குறிப்பிட்டார்.