இருப்பதைப் பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்சிக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

சமகால அரசியல் அதிகாரப் பகிர்வை பயன்படுத்தி எமது மக்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

daklas

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாணவர் விடுதித் திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்நாட்டின் புகழ் பூத்த பாடசாலையின் நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடையும் அதேவேளை, இவ்விடுதி வசதியை ஏற்படுத்தித் தந்த கல்லூரியின் பழைய மாணவர் இயன் கிருபாகரன் அவர்களுக்கும், அவர்தம் பாரியாருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்விடுதியின் முழுமையான தேவைகள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சரிடமும், வடமாகாண ஆளுநரிடமும் திரு. கிருபாகரன் கோரிக்கை விடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள், கோரிக்கைகள் தொடர்பில் முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என்று தெரிவித்ததுடன், இது விடயத்தில் தாம் கூடிய கவனம் எடுப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டின் ஏனைய மாகாணங்களை விடவும் வடமாகாணத்திற்கே அதிகளவான நிதி அரசினால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்தவகையில் மாகாண கல்வி அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் மேற்படி கோரிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், இன்றிருக்கும் இச்சூழலைப் புறந்தள்ளிவிட்டு, இருப்பதைப் பாதுகாத்துக் கொண்டு நடைமுறைச்சாத்தியமான வழியில் தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக, அதிகாரப் பகிர்வு எம்மிடம் இருக்கிறது. எனவே, சமகாலத்தில் எமக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக இருப்பதைப் பாதுகாத்துக் கொண்டே நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் யோகேந்திரநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவரும், விடுதியை நிர்மாணித்தவருமான கரன் என்று அழைக்கப்படும் இயன் கரன், ஜேர்மன் நாட்டின் தூதுவர் டொக்டர் ஜோகன் மோர்ஹார்ட், வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.

தொடர்புடைய செய்திகள்

வாழ்க்கையில் வெற்றி பெறுவதை விட வாழ்க்கை வெற்றி பெற வேண்டும் – முதலமைச்சர்

டக்ளஸுடன் அரசியலில் இணைய பல தடைகள் உள்ளன – முதலமைச்சர்

Related Posts