இராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்பட்டதா?

யாழ்ப்பாணம் கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பெருந் தொகை கஞ்சா இராமேசுவரம் கடல்வழியாக கடத்தப்பட்டதா என, இந்திய மத்திய, மாநில பொலிஸார் மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழ் கடல் பகுதியில் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த பிளாஸ்டிக் படகை சுற்றி வளைத்து சோதனையிட்டனர்.

இதன்படி அதில் மறைத்து வைத்திருந்த கேரளா கஞ்சா 73 கிலோ 900 கிராம் மீட்கப்பட்டது.

பின்னர், மன்னார், வேலனையை, சாவச்சேரி ஆகிய பகுதிகளை சேர்ந்த நால்வரை இது தொடர்பில் கைது செய்த அவர்கள், சந்தேகநபர்களை காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில் கஞ்சாவை கேரள பகுதியில் வாங்கி, தமிழக கடல் பகுதி வழியாக கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சந்தேகநபர்களை ஊர்காவற்துறை பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்ததாகவும் அவர்கள் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வௌியாகியுள்ளது.

இந்தநிலையில், இது தொடர்பாக இராமேசுவரம் பகுதியை சேர்ந்த மத்திய, மாநில உளவுப்பிரிவு பொலிஸார் இராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், தங்கச்சிமடம் கடலோரப் பகுதிகளில் வசித்து வரும் மீனவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என தமிழக ஊடகமான தினமணி செய்திகள் குறிப்பிடுகின்றன.

Related Posts