கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் எட்டுப் பேரையும், ஜெகதாபட்டணம் அருகே நான்கு பேரையும் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதன்படி தலைமன்னார் கடற்கரை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
இராமேஸ்வரத்தில் இருந்து 651 விசைப்படகுகளில் 2,700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் இந்திய எல்லையான கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படை, இராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டியடித்துள்ளனர். மீனவர்கள் மீது கற்கள் மற்றும் கம்புகளை கொண்டு தாக்குதல் நடத்தினர்.
இதை தொடர்ந்தே 2 படகுகளையும், மீனவர்கள் 12 பேரையும் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.